சிறுமியை கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு வந்த உறவினர்களால் பரபரப்பு
சிறுமியை கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு வந்த உறவினர்களால் பரபரப்பு
தேன்கனிக்கோட்டை, அக்.27-
தேன்கனிக்கோட்டையில் சிறுமியை கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு வந்த உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாம்பு கடித்தது
தேன்கனிக்கோட்டை அருகே பையில்காடு கிராமத்தை சேர்ந்த மணி என்பவரது மகள் சஞ்சனாஸ்ரீ (வயது 5). இவள் தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது பாம்பு ஒன்று அந்த சிறுமியை கடித்து விட்டது. இதில் அந்த சிறுமி அலறி துடித்தாள். உடனே அங்கிருந்தவர்கள் அந்த பாம்பை உருட்டு கட்டையால் அடித்துக் கொன்றனர்.பின்னர் சிறுமியை தேன்கனிக்கோட்டை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். சிறுமியை அவசர சிகிச்சை வார்டில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்ததால் பரபரப்பு
இதற்கிடையே அடித்துக்கொன்ற பாம்பை, அந்த சிறுமியின் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அதாவது சிறுமியி்ன் சித்தி பாம்பை கையில் எடுத்து வந்தார். அந்த பாம்பை டாக்டரிடம் காண்பித்து இதுதான் சிறுமியை கடித்து விட்டதாக கூறினார். இந்த சம்பவத்தால் ஆஸ்பத்திரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு சிறுமி நலமாக உள்ளதாக உறவினர்கள் கூறினர்.
இதற்கிடையே மரியாளம் என்ற கிராமத்தில் விவேக் (12) என்ற சிறுவனும் பாம்பு கடித்து காயமடைந்தான். அவனும் சிகிச்சைக்கு பிறகு நலமாக உள்ளான். தற்போது மழை பெய்து வருவதால் அந்த பகுதியில் பாம்புகளின் நடமாட்டம் இருப்பதாகவும், இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.