7 மாத குழந்தையை கொன்று கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
7 மாத குழந்தையை கொன்று கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
தேன்கனிக்கோட்டை, அக்.27-
தாய் வீட்டுக்கு கணவர் அழைத்து செல்லாததால் 7 மாத குழந்தையை கொன்று கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
அஞ்செட்டி அருகே நடந்த இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தனியார் நிறுவன ஊழியர்
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா நாட்றம்பாளையம் அருகே உள்ள மேட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 30). இவர் ஓசூரில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி தீபா (23). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. வர்ணிதா (3) மற்றும் 7 மாதத்தில் தனுஸ்ரீ என்ற 2 பெண் குழந்தைகள் உண்டு.
கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் உரிகம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு அழைத்து செல்லும்படி வெங்கடேசிடம், தீபா கேட்டுள்ளார். அப்போது வெள்ளிக்கிழமை அழைத்து செல்வதாக வெங்கடேஷ் கூறி விட்டு வெளியே சென்றதாக தெரிகிறது.
கிணற்றுக்குள் பிணங்கள்
இந்த நிலையில் வர்ணிதாவை வீட்டில் தூங்க வைத்து விட்டு குழந்தை தனுஸ்ரீயுடன் தீபா மாயமானார். அவரை மாமியார் தங்கம்மா மற்றும் உறவினர்கள் தேடி பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அஞ்செட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் ஒருபுறமும், ஊர் பொதுமக்கள் ஒருபுறமும் தேடினர். ஆனால் இருவரும் எங்கு சென்றனர் என்ற விவரம் தெரியவில்லை. இதற்கிடையே அங்குள்ள கிணற்றில் ஒரு பெண்ணும், குழந்தையும் பிணமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
குழந்தையை கொன்று தற்கொலை
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கிணற்றில் பிணமாக கிடந்த 2 உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் மாயமான தீபா, அவருடைய குழந்தை தனுஸ்ரீ இருவரும்தான் என்பது தெரியவந்தது.
மேலும் குடும்ப தகராறில் மனம் உடைந்த தீபா, தன்னுடைய குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு தானும் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உதவி கலெக்டர் விசாரணை
இதற்கிடையே தீபாவின் தந்தை கிருஷ்ணன் அஞ்செட்டி போலீசில் புகார் செய்தார். அதில், தன்னுடைய மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், வரதட்சணை கொடுமையால் தன்னுடைய மகள் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமணம் ஆகி 5 ஆண்டுகளுக்குள் இளம்பெண் குழந்தையை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துள்ளதால் ஓசூர் உதவி கலெக்டர் நிசாந்த் கிருஷ்ணா விசாரணை நடத்தி வருகிறார்.
தேன்கனிக்கோட்டை அருகே குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் அஞ்செட்டி அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.