பழனி முருகன் கோவிலில் அறநிலைய துறை முதன்மை செயலாளர் ஆய்வு

பழனி முருகன் கோவிலில் நடைபெற்று வரும் 2-வது ரோப்கார் அமைக்கும் பணி மற்றும் கும்பாபிஷேகத்திற்கான புனரமைப்பு பணிகளை இந்துசமய அறநிலைய துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2021-10-26 16:49 GMT
பழனி:
பழனி முருகன் கோவிலில் நடைபெற்று வரும் 2-வது ரோப்கார் அமைக்கும் பணி மற்றும் கும்பாபிஷேகத்திற்கான புனரமைப்பு பணிகளை இந்துசமய அறநிலைய துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  
முதன்மை செயலாளர் ஆய்வு
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது பழனிக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கிடையே கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 
இந்தநிலையில் சுற்றுலா மற்றும் இந்துசமய அறநிலைய துறையின் மாநில முதன்மை செயலாளர் சந்திரமோகன் நேற்று பழனி முருகன் கோவிலுக்கு வந்தார். அப்போது அவர் அடிவாரம் கிழக்கு கிரிவீதியில் உள்ள சுற்றுலா பஸ் நிலையத்தில் அமைக்கப்படவுள்ள இணைப்பு சாலை, 2-வது ரோப்கார் கட்டுமான பணிகளை ஆய்வு செய்ததார். பின்னர் ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு அவர் சென்றார். 
கும்பாபிஷேக பணிகள்
அங்கு ரோப்கார் மேல்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள லிப்ட், அன்னதான கூடம், பிரசாத விற்பனை கூடம் உள்ளிட்ட இடங்களை முதன்மை செயலாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
அப்போது அன்னதான கூடத்தில் வழங்கப்படும் உணவுகளின் தரம் மற்றும் சுவை அறிவதற்காக அவற்றை சாப்பிட்டு ருசி பார்த்தார். தொடர்ந்து மலைக்கோவிலில் நடைபெற்று வரும் கும்பாபிஷேக பணிகள் குறித்து கேட்டறிந்தார்.  மேலும் ரோப்கார் மேல்தளத்தில் லிப்ட் அமைக்கப்பட்டது போன்று, மின்இழுவை ரெயில் நிலையத்தின் மேல்தளத்திலும் லிப்ட் அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்து, அறிக்கை அனுப்பும்படி கோவில் அதிகாரிகளை அறிவுறுத்தினார். அதன்பிறகு அவர் மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
பஞ்சாமிர்தம்
பின்னர் மின்இழுவை ரெயில் மூலம் அடிவாரத்திற்கு வந்த அவர், பஞ்சாமிர்தம் தயாரிக்கும் நிலையத்தை ஆய்வு செய்தார். அப்போது அங்கு தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தத்தை சாப்பிட்டு சோதனை செய்தார். அதைத்தொடர்ந்து சித்தா மருத்துவமனை அமைய உள்ள இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது பழனி முருகன் கோவில் இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார், பழனி ஆர்.டி.ஓ. ஆனந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்