இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
தேனி, ஆண்டிப்பட்டியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி:
இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் நன்கொடையாக வந்த நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி வைப்பு நிதி மூலம் வருவாய் ஈட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி தேனி பழைய பஸ் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொதுச்செயலாளர் முருகன் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர்கள் உமையராஜன், கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். கோவில் நகைகளை உருக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதேேபால் ஆண்டிப்பட்டியில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம்.செல்வம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.