முதியவரிடம் ஏ.டி.எம்.எந்திரத்தில் பணம் எடுத்து தருவதுபோல் மோசடி
முதியவரிடம் ஏ.டி.எம்.எந்திரத்தில் பணம் எடுத்து தருவதுபோல் மோசடி
இடிகரை
கோவையை அடுத்த வடமதுரை தொப்பம்பட்டி பிரிவு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது75). சம்பவத்தன்று இவர் பணம் எடுப்பதற்காக நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஏ.டி.எம் மையத்துக்கு சென்றார். ஆனால் அந்த ஏ.டி.எம்.எந்திரத்தில் பணம் எடுக்க தெரியாமல் நின்றிருந்தார். அப்போது அங்கு ஒரு வாலிபர் மற்றும் பெண் வந்தனர்.
அவர்கள் ஆறுமுகத்திடம் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக கூறினார். உடனே ஆறுமுகம் அவர்களிடம் தனது ஏ.டி.எம் கார்டை கொடுத்தார். பின்னர் அந்த வாலிபர், ஆறுமுகம் எடுக்க சொன்ன தொகையான ரூ.3 ஆயிரத்தை எடுத்து, பணத்தையும், ஏ.டி.எம் கார்டையும் ஆறுமுகத்திடம் கொடுத்தார்.
ஆறுமுகம் பணத்தை பெற்று கொண்டு வீட்டிற்கு சென்றார். வீட்டில் ஏ.டி.எம் கார்டை எடுத்து வைப்பதற்காக பார்த்தார். அப்போது அந்த கார்டு அவருடையது இல்லை என்பது தெரியவந்தது. உடனே அவரது செல்போனை எடுத்துப் பார்த்தார். அதில் ரூ.10 ஆயிரம் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்திருந்தது. ஆறுமுகம் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தார்.
அப்போது அவரது செல்போனுக்கு மீண்டும் ஒரு குறுஞ்செய்தி வந்தது.அதில் மீண்டும் ரூ.5 ஆயிரம் எடுத்ததாக காண்பித்தது. தொடர்ந்து மீண்டும் ரூ.5 ஆயிரம் எடுத்ததாக காண்பித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே தனது மகன் சந்திரசேகரை அழைத்து நடந்தவற்றை கூறினார்.
அவர் ஆறுமுகத்தை அழைத்துக்கொண்டு பணம் எடுத்த ஏ.டி.எம் மையத்திற்கு அருகில் இருந்த வங்கிக்கு சென்றார். அங்கு சென்று நடந்தவற்றை கூறினர். பின்னர் ஏ.டி.எம் மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் பதிவாகிருந்த 2 பேரின் படங்களை பெற்று விசாரித்தனர்.
இதில் அந்த மர்ம நபர்கள் ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தி அருகே உள்ள துணிகடையில் துணி வாங்கியதும் தெரியவந்தது. உடனே ஆறுமுகம் மற்றும் அவரது மகன் அந்த துணிகடைக்கு சென்றனர். அப்போது அந்த வாலிபரும் அந்தப் பெண்ணும் அந்த ஜவுளிக்கடை முன்பு நின்றிருந்தது தெரியவந்தது. உடனே அவர்களை ஆறுமுகம் மற்றும் அவரது மகன் சந்திரசேகர், பொதுமக்கள் உதவியுடன் மடக்கிப்பிடித்தனர்.
பின்னர் அவர்களை பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த வாலிபர் கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்த சரவணகுமார் (27) என்பதும், அவருடன் வந்த பெண் பொள்ளாச்சி அருகே உள்ள பெரியநெகமம் பகுதியை சேர்ந்த கமலவேணி (55) என்பதும் தெரியவந்தது.
இருவரும் நண்பர்களாக பழகி இதுபோன்ற மோசடிவேலைகளில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்து ரூ.14 ஆயிரம் பணம், 17 ஏ.டி.எம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.