நீலகிரியில் 10 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார்
நீலகிரியில் 10 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார்
ஊட்டி
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு நீலகிரியில் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவதோடு, 10 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
வடகிழக்கு பருவமழை
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக பந்தலூரில் அதிக மழைப்பொழிவு பதிவாகிறது. வருகிற நாட்களில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீலகிரியில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 6 தாலுகாக்களில் 283 பகுதிகள் அபாயகரமான இடங்களாக கண்டறியப்பட்டு உள்ளது. அதிக மழைப்பொழிவு காணப்படும் அபாயகரமான இடங்களில் பாதிப்பு ஏதேனும் ஏற்படுகிறதா என்று மண்டல குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
42 மண்டல குழுக்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளது. மலைப்பாதையில் ஆங்காங்கே மண்சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுந்து வருகின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகவும் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஊட்டி-கோத்தகிரி சாலை, குன்னூர்-கோத்தகிரி சாலை, ஊட்டி-மஞ்சூர் சாலை, கோத்தகிரி மேட்டுப்பாளையம் மாநில நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டால் உடனுக்குடன் அகற்ற பொக்லைன் எந்திரங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது.
முன்னேற்பாடுகள் தயார்
5 உட்கோட்டங்களில் தலா 2,000 மணல் மூட்டைகள் என மொத்தம் 10 ஆயிரம் மணல் மூட்டைகள் தயாராக வைக்கப்பட்டு இருக்கிறது. மண்சரிவு ஏற்பட்டால் உடனுக்குடன் மூட்டைகளை அடுக்கி போக்குவரத்து தடைபடாமல் இருக்க முன்னேற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மரம் அறுக்கும் எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதோடு, சாலை பணியாளர்களுக்கு பேரிடர் மீட்பு நடவடிக்கை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- கீழ் கோத்தகிரி-13, தேவாலா-20, செருமுள்ளி-16, பாடாந்தொரை-15, ஓவேலி-12, பந்தலூர்-61, சேரங்கோடு-94 உள்பட மொத்தம் 282 மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 9.72 ஆகும்.