கைதான கனகராஜின் அண்ணன் உள்பட 2 பேரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம்

கைதான கனகராஜின் அண்ணன் உள்பட 2 பேரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம்

Update: 2021-10-26 13:16 GMT
ஊட்டி

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தடயங்களை அழித்ததாக கனகராஜ் அண்ணன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டு உள்ளனர்.

கோடநாடு வழக்கு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ், திபு, சதீசன், சம்சீர் அலி உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே சயான், விபத்தில் இறந்த கனகராஜ் (ஜெயலலிதா கார் டிரைவர்) அண்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். வழக்கு தொடர்பாக முழு விசாரணை நடத்த ஊட்டி கோர்ட்டு கூடுதலாக கால அவகாசம் வழங்கியது. சாட்சிகள், தேவைப்பட்டோரிடம் முழு விசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. ஜாமீனில் உள்ள 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

முக்கிய ஆதாரங்கள்

சம்பவத்துக்கு பின் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த கனகராஜ் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்த விபத்தில் இறந்தார். மேலும் கோடநாடு எஸ்டேட் கணினி ஆப்ரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை செய்துகொண்டார். இந்த 2 மரணங்களும் யதார்த்தமாக நடந்ததா அல்லது கூட்டுச் சதியா என்பது குறித்து போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தி பதிவு செய்து வருகின்றனர். முக்கிய தகவல்கள் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் மின்னணு ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகிறது.
கனகராஜ் விபத்தில் இறந்த வழக்கு குறித்து மறுவிசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்குக்கும், கனகராஜ் இறந்த வழக்குக்கும் தொடர்பு உள்ளதா என்று கனகராஜின் உறவினர்கள், நண்பர்களிடம் போலீசார் துருவித் துருவி விசாரித்தனர். விசாரணையில் திடீர் திருப்பமாக தடயங்களை அழித்ததாக கனகராஜ் அண்ணன் தனபால், நெருங்கிய உறவினர் ரமேஷ் ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கூடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

காவலில் எடுத்து விசாரிக்க திட்டம்

போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடப்பதற்கு முன்பு கனகராஜ் திட்டம் தீட்டியது குறித்து ஏற்கனவே கைதான 2 பேருக்கும் தெரிய வந்திருக்கிறது. விபத்தில் கனகராஜ் இறந்த பின்னர் அவரது செல்போனில் உள்ள முக்கிய தகவல்கள் மற்றும் முக்கிய நபர்களுடன் பேசிய உரையாடல்கள் அழிக்கப்பட்டு உள்ளது. இதனால் கனகராஜ் இறந்த வழக்குக்கும், கோடநாடு வழக்குக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் வலுவாக இருப்பதாக போலீசார் கூறுகிறார்கள். 
எனவேதான் தனபாலிடமும், ரமேசிடமும் மேற்கொண்டு விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளிவரலாம் என்ற அடிப்படையில் போலீஸ் காவலில் எடுத்து மேல் புலன் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதுகுறித்து ஊட்டி கோர்ட்டில் விரைவில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. அப்போதுதான் மேலும் முக்கிய நபர்களுக்கு தொடர்பு இருப்பது குறித்து வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
மேலும் இந்த வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் கரூரில் உள்ள சிலரிடம் விசாரணை நடத்த சென்று உள்ளார்கள். நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்