சேலம் சின்ன திருப்பதியில் ‘தெர்மாகோல்’ கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்த மாணவன் பலி
சேலம் சின்ன திருப்பதியில் தெர்மாகோல் அட்டையை உடலில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்த 8-ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலியானான்.
கன்னங்குறிச்சி:
சேலம் சின்ன திருப்பதியில் தெர்மாகோல் அட்டையை உடலில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்த 8-ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலியானான்.
8-ம் வகுப்பு மாணவன்
சேலம் சின்ன திருப்பதி அய்யப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவருடைய மகன் கிருஷ் விக்ரகாந்த் (வயது 13). இவன் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மதியம் வரை வீட்டில் இருந்துவிட்டு மாலையில் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றான்.
பின்னர் அவன் தனது நண்பர்களுடன் கோகுல் நகரில் உள்ள விவசாய கிணற்றுக்கு சென்றுள்ளான். அங்கு நண்பர்கள் குளிப்பதை பார்த்த கிருஷ் விக்ரகாந்துக்கும் கிணற்றில் குளிக்க ஆசை ஏற்பட்டது.
தெர்மாகோல் அட்டை
இளங்கன்று பயமறியாது என்பதை போல், தனக்கு நீச்சல் தெரியாது என்றாலும் அங்கு கிடந்த தெர்மாகோல் அட்டையை உடலில் கட்டிக்கொண்டு ஆர்வக்கோளாறில் அந்த மாணவன் கிணற்றில் குதித்து உள்ளான். ஆனால் தெர்மாகோல் அட்டை உடைந்ததால் கிருஷ் விக்ரகாந்த் தண்ணீரில் மூழ்கினான்.
இந்த தகவல்களை நண்பர்கள் யாரிடமும் சொல்லாமல், வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இரவு நீண்டநேரமாகியும் தனது மகன் வீட்டிற்கு வரவில்லை என்பதால் அவனது நண்பர்களிடம் சோமசுந்தரம் விசாரித்தார். ஆனால் அவர்கள் சரிவர தகவல் சொல்லாததினால் கன்னங்குறிச்சி போலீசில் தனது மகன் மாயமானது குறித்து சோமசுந்தரம் புகார் கொடுத்தார்.
உடல் மீட்பு
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது மாணவன் கிருஷ் விக்ரகாந்த் கிணற்றில் மூழ்கியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு படையினர் மூலம் நேற்று அதிகாலை மாணவனின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தெர்மாகோல் அட்டையை கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்த மாணவன் பலியான சம்பவம் சின்ன திருப்பதி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.