சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கினால் பெங்களூரு மாநகராட்சி தேர்தலை நடத்த தயார் - தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா பேட்டி
சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கினால் பெங்களூரு மாநகராட்சி தேர்லை நடத்த தயார் என்று மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா அறிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
தேர்தலை நடத்த தயார்
பெங்களூரு மாநகராட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் கவுன்சிலர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். பெங்களூரு மாநகராட்சி தேர்தல் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. பெங்களூரு மாநகராட்சி தேர்தலை நடத்துவதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கினால், மாநகராட்சி தேர்தலை நடத்த தயாராக உள்ளது.
243 வார்டு அல்லது 198 வார்டுகளின் அடிப்படையில் மாநகராட்சி தேர்தல் நடத்தப்படும். ஆனால் 198 வார்டுகளின் அடிப்படையில் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் அரசு தெரிவித்துள்ளது. மாநகராட்சி தேர்தல் விவகாரம் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையமும், அரசு மற்றும் மாநகராட்சியிடம் இருந்து தகவல்களை பெற்றுள்ளது.
இடித்து அகற்றப்படும்
பெங்களூரு மாநகராட்சி விஸ்தரிக்கப்பட்டு 198 வார்டுகளுக்கு பதிலாக 243 வார்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 243 வார்டுகளாக மாற்றும் பணிகள் நடந்து வருகிறது. அந்த பணிகள் முடிந்ததும் தேர்தல் ஆணையத்திற்கு மற்றொரு அறிக்கை வழங்கப்படும். அதன்பிறகு, தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையமும் முடிவு செய்து அறிவிக்கும். மாநகராட்சி தேர்தலை நடத்தும் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவே இறுதியானதாகும்.
பெங்களூருவில் சமீபகாலமாக பெய்யும் மழை காரணமாக ஏற்பட்ட நஷ்டம் குறித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது. ஒவ்வொரு மண்டலம் வாரியாக நஷ்டத்தை தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும், பெங்களூருவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. பெங்களூருவில் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்களை அகற்றும்படி நோட்டீசு வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆனாலும் இடிந்து விழும் நிலையில் இருக்கும் கட்டிடங்களை இடித்து அகற்ற மாநகராட்சி சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு கவுரவ் குப்தா கூறினார்.