ரயான் நூல் விலை உயர்வால் விசைத்தறி தொழில் பாதிப்பு- கலெக்டரிடம் விசைத்தறியாளர்கள் மனு
ரயான் நூல் விலை உயர்வால் விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டரிடம் விசைத்தறியாளர்கள் மனு கொடுத்தனர்.
ஈரோடு
ரயான் நூல் விலை உயர்வால் விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டரிடம் விசைத்தறியாளர்கள் மனு கொடுத்தனர்.
நூல் விலை உயர்வு
தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள், கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம் நேற்று கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
செயற்கை இழையால் உற்பத்தி செய்யப்பட்ட ரயான் நூல் மூலம் பெரும்பாலான துணிகள் விசைத்தறிகளில் நெசவு செய்யப்படுகிறது. இந்த தொழிலை நம்பி 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். கடந்த 3 மாதமாக ரயான் நூலின் மூலப்பொருளான பைபர் விலை உயர்ந்து வருகின்றது. இதன் காரணமாக கடந்த 1-ந்தேதி ரூ.214-க்கு விற்பனையான 30 கவுண்ட் கொண்ட ஒரு கிலோ ரயான் நூல் அடிக்கடி விலை உயர்ந்து நேற்று முன்தினம் ரூ.255-க்கு விற்கப்பட்டது.
மில் உரிமையாளர்கள் தன்னிச்சையாக நூல் விலையை உயர்த்தி வருகின்றனர். அதே அளவுக்கு துணி விலை உயராததால், உற்பத்தி செய்யப்படும் துணி ஒரு மீட்டருக்கு 5 ரூபாய் 83 காசுகள் இழப்பு ஏற்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் எடுக்கப்பட்ட துணி ஆர்டரை, நூல் விலை உயர்வால் முடித்து கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வீட்டு மனைகள்
எனவே, நூல் விலையை மாதம் ஒரு முறை மட்டும் நிர்ணயிக்க வேண்டும். நூல் விலையை உடனடியாக கட்டுப்படுத்தி விலையேற்றத்தை மத்திய அரசு தனது கட்டுக்குள் வைக்க வேண்டும். மேலும் தென்னிந்தியாவில் உள்ள 6 நேஷனல் டெக்ஸ்டைல் கார்பரேஷன் ஆலைகளை இயக்கி நூல் உற்பத்தி செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
ஈரோடு நசியனூர் பகுதியில் விளை நிலங்கள், ஆயக்கட்டு பாசன நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதை தடுக்க கோரி, தமிழக ஹிந்து மக்கள் முன்னணியினர் கலெக்டரிடம் மனு கொடுத்து இருந்தனர்.