விதானசவுதாவுக்கு அரசு பூட்டு போட்டுள்ளது- டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு
மந்திரிகள் அனைவரும் இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால் விதானசவுதாக்கு அரசு பூட்டு போட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
விதானசவுதாவுக்கு பூட்டு
மாநிலத்தில் காலியாக உள்ள சிந்தகி, ஹனகல் சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிகார பலம் மற்றும் பண பலத்தால் வெற்றி பெற்று விடலாம் என்று பா.ஜனதாவினரும், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும் கனவு காண்கிறார்கள். இதற்காக தான் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான மந்திரிசபையில் உள்ள அனைத்து மந்திரிகளும் இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மந்திரிகள் அனைவரும் இடைத்தேர்தல் பிரசாரத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்கள். எந்த விதமான மக்கள் பணிகளும் நடைபெறவில்லை. மந்திரிகள் இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால் விதானசவுதாவுக்கு அரசு பூட்டு போட்டு இருக்கிறது. அரசு பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது.
பா.ஜனதாவுக்கு தோல்வி பயம்
பா.ஜனதாவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. இதனால் தான் அனைத்து மந்திரிகளும் சிந்தகி, ஹனகலில் முகாமிட்டு பிரசாரம் செய்து வருகின்றனர். முதல்-மந்திரியாக இருப்பவர் இடைத்தேர்தலில் ஒரு முறை அல்லது 2 முறை சென்று பிரசாரம் செய்வார்கள். பசவராஜ் பொம்மை, இடைத்தேர்தல் பிரசாரத்தில் மட்டுமே ஈடுபட்டு வருகிறார். சிந்தகி, ஹனகல் தொகுதி மக்கள் அறிவு உள்ளவர்கள்.
அவர்கள் இடைத்தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்து விட்டார்கள். காங்கிரசுக்கு வாக்களிக்கவும், ஆதரிக்கவும் மக்கள் தயாராகி விட்டனர். மக்கள் ஆதரவுடன் இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் 100 இல்லை, 200 சதவீதம் காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெரிய தலைவர். அவா் கூறும் குற்றச்சாட்டு பதில் சொல்ல விரும்பவில்லை.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.