கர்நாடகத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை அரசு அமல்படுத்த கூடாது - பேராயர் பீட்டர் மச்சாடோ பேட்டி
கர்நாடகத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை அரசு அமல்படுத்த கூடாது என்று பேராயர் பீட்டர் மச்சாடோ கூறியுள்ளார்.
பெங்களூரு:
மதமாற்ற தடை சட்டம்
கர்நாடகத்தில் இந்து மதத்தினரை கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் கட்டாய மதமாற்றம் செய்வதாக சமீபகாலமாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. ஆளும் பா.ஜனதா கட்சியை சேர்ந்த சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்கா எம்.எல்.ஏ. கூலிகட்டி சேகரின் தாயும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி இருந்தார். அவரை ஒரு சிலர் கட்டாய மதமாற்றம் செய்ததாக கூலிகட்டி சேகர் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு கூறி இருந்தார். மேலும் கட்டாய மதமாற்றம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார்.
இந்த நிலையில் பா.ஜனதா ஆளும் உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் அமலில் உள்ளது. இதுபோன்று கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை கர்நாடகத்திலும் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது. இதுகுறித்து போலீஸ் மந்திரி அரக ஞானேந்திராவுடன், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தியதாகவும், கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்து இருந்ததாகவும் கூறப்பட்டது.
மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்
இதுபற்றி அறிந்த கிறிஸ்தவ பேராயர்கள் சமீபத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை சந்தித்து கட்டாய மத மாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து இருந்தனர். இந்த நிலையில் பெங்களூருவில் பேராயர் பீட்டர் மச்சாடோ நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-
கர்நாடகத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டாம் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை நேரில் சந்தித்து பேராயர்கள் கோரிக்கை விடுத்தோம். ஆனாலும் கட்டாய மதமாற்ற தடை சட்டம் அமல்படுத்தப்பட இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்து உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் முதல்-மந்திரியை சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளோம்.
மாநில அரசின் முடிவை கிறிஸ்தவ சமூகம் எதிர்க்கும். அரசின் இந்த முடிவு தன்னிச்சையானது. கிறிஸ்தவ சமூகத்தை மட்டுமே குறிவைக்க இந்த சட்டம் வழிமொழிகிறது. ஒரு சிலர் செய்யும் தவறுக்காக அனைவரையும் தண்டிக்க நினைப்பது நியாயமற்றது. இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் எங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி அமைதியான முறையில் மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்துவோம். இந்த சட்டத்தை அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் நவம்பர் மாதம் 2-வது வெள்ளிக்கிழமை அன்று கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை மற்றும் உண்ணாவிரதத்தை கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன். 2008-ம் ஆண்டு தேவலாயங்கள் சேதப்படுத்தப்பட்ட போது கிறிஸ்தவர்களுக்கு பசவராஜ் பொம்மை ஆதரவாக இருந்தார். அவர் இந்த பிரச்சினையை திறம்பட கையாள்வார் என்று பேராயர்கள் நம்புகிறோம்.
இவ்வாறு பீட்டர் மச்சாடோ கூறினார்.