தந்தையுடன் தீக்குளிக்க வந்த பெண்ணால் பரபரப்பு
தந்தையுடன் தீக்குளிக்க வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர்:
மண்எண்ணெய் பாட்டில்
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த பொதுமக்களின் உடைமைகளை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சோதனையிட்ட பிறகே, அவர்களை உள்ளே செல்ல அனுமதித்தனர்.
இந்நிலையில் ஒரு முதியவருடன் வந்த பெண் தனது பையில் பாட்டிலில் மண்எண்ணெய் கொண்டு வந்திருந்ததை சோதனையில் கண்டுபிடித்த போலீசார், அதனை கைப்பற்றி அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சென்னை புரசைவாக்கம் சரவண பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த அழகப்பனின் மனைவி பவுனம்மாள் (வயது 58) என்பதும், கூட வந்திருந்தவர் பவுனம்மாளின் தந்தையான ஆலத்தூர் தாலுகா பிலிமிசை கிழக்கு தெருவை சேர்ந்த ராமசாமி என்ற சின்னு (95) என்பதும் தெரியவந்தது.
சொத்துக்களை மீட்க வேண்டும்
மேலும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் கூறுகையில், ராமசாமியின் சொத்துக்களை அபகரிக்க பவுனம்மாளுக்கு தெரியாமல், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் உதவியுடன் பவுனம்மாளின் 2 அண்ணன்கள், அண்ணன் மகன் ஒருவர் ஆகியோர் சேர்ந்து, ராமசாமியை ஏமாற்றி கையெழுத்து வாங்கியதாகவும், பவுனம்மாளின் தம்பி மனைவி ராமசாமியின் மீது சுடச்சுட டீயை ஊற்றியதாகவும், ராமசாமிக்கு அவரது 3 மகன்களும் சாப்பாடு கொடுப்பது இல்லை என்றும் பவுனம்மாள் தெரிவித்தார். மேலும் ராமசாமியின் சொத்துக்களை அண்ணன்களிடம் இருந்து மீட்டு தர கோரியும், ராமசாமி மீது டீ ஊற்றிய தம்பி மனைவி மீது நடவடிக்கை எடுக்க கோரியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், மருவத்தூர் போலீசாரிடமும் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், சொத்துக்களை மீட்டு அதனை கோவில்களுக்கு எழுதிக்கொடுக்க முடிவு செய்ததாகவும், வயதான காலத்தில் ராமசாமிக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தீக்குளிப்பதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு மண்எண்ணெய் கேனுடன் வந்ததாகவும் பவுனம்மாள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து பவுனம்மாள் தனது தந்தையுடன் கோரிக்கை தொடர்பான மனுவை கலெக்டரிடம் அளித்து விட்டு சென்றார். தந்தையுடன் தீக்குளிக்க பாட்டிலில் மண்எண்ணெய் கொண்டு வந்த பெண்ணால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தனி ஊராட்சி
ஆலத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாடாலூர் ஊராட்சியில் உள்ள திருவளக்குறிச்சியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், சுமார் 1,500 வாக்காளர்களை கொண்டுள்ள எங்கள் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் அரசின் சலுகைகள் கிடைக்க பாடாலூர் ஊராட்சியில் இருந்து திருவளக்குறிச்சி, ஊத்தாங்கால், ராஜா மலை, குட்டியப்பன் காலனி ஆகிய கிராமங்களை பிரித்து, திருவளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு தனி ஊராட்சியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இடமாற்றம் செய்யக்கூடாது
வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.பி.ஏ. பயிலும் மாணவ- மாணவிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் கல்லூரியின் பி.பி.ஏ. துறைத் தலைவர் சத்தியசீலன் மாணவ-மாணவிகளுக்கு நன்றாக பாடங்களை கற்பித்து வருகிறார். மேலும் ஏழை, எளிய கல்லூரி மாணவ-மாணவிகளை கண்டறிந்து, அவர்கள் இலவசமாக மேற்படிப்பு படிக்க உதவி செய்து வருகிறார். தற்போது அவருக்கு கரூர் அரசு கல்லூரிக்கு பணியிட மாறுதல் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த உத்தரவை ரத்து செய்து, அவரை எங்கள் கல்லூரியில் தொடர்ந்து பணிபுரிவதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
193 மனுக்கள்
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 193 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்ற கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அங்கையற்கண்ணி, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) லலிதா உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.