சாந்தநாதசாமி கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவில் மழை கொட்டித் தீர்த்தது. சாந்தநாதசாமி கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. பல்லவன் குளம் நீர் நிரம்பியது.

Update: 2021-10-25 19:14 GMT
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் புதுக்கோட்டையில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னல், காற்றுடன் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஒரே சீராக மழை கொட்டித் தீர்த்தது. இதன்காரணமாக நகரப்பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பின. பல்லவன் குளத்தில் நீர் நிரம்பி வழிந்தோடியது. மேலும் அருகில் உள்ள சாந்தநாத சாமி கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. மூலஸ்தானம் மற்றும் கோவில் உள்பிரகாரத்தில் தண்ணீர் தேங்கி நின்றது. மேலும் அருகில் உள்ள பூ மார்க்கெட்டிற்குள்ளும் தண்ணீர் புகுந்தது. கோவிலுக்குள் புகுந்த தண்ணீரை அகற்றும் பணி நேற்று காலை நடைபெற்றது.
சுவர் இடிந்தது
விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் விராலிமலை வடக்கு ஆசாரி தெருவில் குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் புகுந்தது. மேலும் சில பகுதிகளில் குளம்போல் மழைநீர் தேங்கி நின்றது. இந்த கனமழையால் விராலிமலை அருகே உள்ள மேப்பூதகுடி கிராமத்தில் உள்ள முருகப்பன் மனைவி மீனா என்பவரின் கூரை வீட்டின் பக்கவாட்டுச் சுவர் நேற்று அதிகாலை இடிந்து விழுந்தது.
இதேபோல் கத்தலூர் கிராமத்தை சேர்ந்த தங்கவேலு என்கிற சஞ்சீவி என்பவரின் விவசாய கிணற்றின் பக்கவாட்டு சுவரும், வேடம்பட்டியைச் சேர்ந்த மூர்த்தி என்பவருடைய விவசாய பம்புசெட் அறையும் இடிந்து விழுந்தன.

மேலும் செய்திகள்