நிலத்தை மீட்டுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு

ஆரணி அருகே பெற்றோரை இழந்த குழந்தைகள் நிலத்தை மீட்டுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Update: 2021-10-25 17:47 GMT
திருவண்ணாமலை

ஆரணி அருகே பெற்றோரை இழந்த குழந்தைகள் நிலத்தை மீட்டுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

 நிலப்பத்திரத்தை வைத்து அடமானம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஆகாரம் ஊராட்சிக்கு உட்பட்ட வாரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 47). இவரது மனைவி கலைச்செல்வி (41). இவர்களுக்கு யோகேஸ்வரி (16), ஹேமமாலினி (9) என 2 மகள்களும், கவுரிசங்கர் (6) என்ற மகனும் உள்ளனர். 

இந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மூர்த்தியின் மாமனார் தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் அவரது கடனை அடைக்க மூர்த்தியிடம் அவரது நிலப் பத்திரத்தை வாங்கி அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளார். 

நீண்ட நாட்களாகியும் ஏழுமலை அடமானம் வைத்த பத்திரத்தை மீட்டுக் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

கடந்த 8-ந்தேதி கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறின் போது குழந்தைகள் கண்முன்னே மூர்த்தி, கலைச்செல்வியை சுத்தியலால் தாக்கி கொலை செய்தார். பின்னர் மூர்த்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

 கலெக்டர் அலுவலகத்தில் மனு

பெற்றோரை இழந்த 3 பேரும் தற்போது பாட்டி ஜெயம்மாளுடன் வசித்து வருகின்றனர். 

இந்த நிலையில் மூர்த்தியின் நிலத்தை அடமானமாக பெற்றுக்கொண்ட நபர்கள் நிலத்தை அவர்கள் பெயருக்கு மாற்றிக்கொண்டதாகவும், தற்போது அவர்கள் தங்களை வீட்டை விட்டு வெறியேறும் படி கொலை மிரட்டல் விடுப்பதாகவும் 3 பேரும் நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனு அளிக்க வந்தனர். 

அப்போது அவர்கள் கந்துவட்டி கும்பல் அட்டூழியத்தால் தாய்-தந்தை இறப்புக்கு நீதி விசாரணை வேண்டும் என்று பேனருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

பின்னர் அவர்களை அங்கிருந்த போலீசார் பேசி கோரிக்கை மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்குள் அழைத்து சென்றனர்.

மேலும் செய்திகள்