செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் திடீர் போராட்டம்

செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் திடீர் போராட்டம்

Update: 2021-10-25 17:41 GMT
தர்மபுரி, அக்.26-
தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் பணிபுரியும் செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் கடந்த மாத ஊதியத்தை உடனே வழங்க வலியுறுத்தி நேற்று திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திடீர் போராட்டம்
தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள், மருந்தாளுனர்கள், லேப் டெக்னீசியன்கள், நுண்கதிர் பணியாளர்கள், மருத்துவ துறை ஊழியர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 169 செவிலியர்கள், மருத்துவ துறை ஊழியர்கள் உள்ளிட்ட பலருக்கு கடந்த ஒரு மாத காலமாக ஊதியம் வழங்கப்படவில்லை. மேலும் 40 தற்காலிக செவிலியர்களுக்கு சில மாத ஊதியம் வழங்கப்படவில்லை.
இதனால் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள இயலாமல் பாதிப்புக்குள்ளான செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் நேற்று காலை பணியை புறக்கணித்து தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். அங்கு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும். ஊழியர்களின் ஊதிய பட்டியலை அனுப்புவதில் மெத்தனமாக செயல்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இந்த போராட்டத்தில் செவிலியர் சங்க மாநில துணைத்தலைவர் தேவேந்திரன், நிர்வாகிகள் பன்னீர்செல்வம், சரவணன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். 2 மணி நேர போராட்டத்தை தொடர்ந்து மருத்துவ கல்லூரி முதல்வர் அமுதவல்லி, கண்காணிப்பாளர் சிவகுமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவத்துறை ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது காலதாமதமின்றி ஊதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், ஊதிய பட்டியலை தயாரித்து அனுப்புவதில் காலதாமதம் ஏற்படுத்திய பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் பணிக்குத் திரும்பினார்கள். இந்தப் போராட்டம் காரணமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்