சின்னசேலத்தில் விவசாயி கொலை வழக்கில் 15 வயது பேரன் கைது

சின்னசேலத்தில் விவசாயி கொலை வழக்கில் அவரது 15 வயது பேரனை போலீசார் கைதுசெய்தனர். பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முன்விரோதத்தால் அவரை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது

Update: 2021-10-25 16:53 GMT
சின்னசேலம்

விவசாயி கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் மாரியம்மன் கோவில் அருகே பண்ணையத்து சந்து தெருவைச் சேர்ந்தவர் முருகேசன்(வயது 75). விவசாயியான இவர் கடந்த 22-ந் தேதி இரவு கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 
மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி மேற்பார்வையில் சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாணிக்கம், சத்தியசீலன் மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர். 

15 வயது பேரன்

கொலை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வுசெய்தும், சந்தேக நபர்களின் தொலைபேசி எண்ணை வைத்தும் தீவிர விசாரணை செய்தனர். இதில் வெளிநபர்கள் யாரும் கொலை செய்திருக்க எந்த முகாந்திரம் இல்லாததால் முருகேசனின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  இதில் 15 வயது பேரனிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் தனது தாத்தாவை கத்தியால் குத்தி கொலை செய்ததை அவர் ஒப்புகொண்டார். 

முன்விரோதம்

இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் கூறும்போது, முருகேசனின் இளைய மகன் பாபுவின் மகன் தான் இந்த சிறுவன். முருகேசனின் வட்டி தொழிலுக்கு உதவியாக இருந்துள்ளார். பணம் கொடுக்கல்-வாங்கலில் தாத்தா பேரன் இருவருக்குமிடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன் கடந்த 22-ந் தேதி இரவு வீ்ட்டில் தனியாக இருந்த முருகேசனை கத்தியால் தொண்டைக்குழியில் குத்தி கொலை செய்து விட்டு தப்பி சென்றதை ஒப்புக்கொண்டான். 
இதையடுத்து சிறுவனை கைது செய்து கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான். மேலும் அவனிடமிருந்து கொலை செய்ய பயன்படுத்திய கத்தி மற்றும் ரத்தக்கரை படிந்த சட்டை ஆகியவற்றையும் கைப்பற்றி இருக்கிறோம். 

தனிப்படையினருக்கு பாராட்டு

விவசாயி கொலை வழக்கில் தீவிர விசாரணை நடத்தி அவரது பேரனை கைது செய்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி, சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் பாராட்டினார்.

மேலும் செய்திகள்