மக்கள் குறைதீர்வு கூட்டத்துக்கு பெட்ரோல் கேனுடன் தீக்குளிக்க வந்த பெண்ணால் பரபரப்பு
மக்கள் குறைதீர்வு கூட்டத்துக்கு பெட்ரோல் கேனுடன் தீக்குளிக்க வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்
மக்கள் குறைதீர்வு கூட்டத்துக்கு பெட்ரோல் கேனுடன் தீக்குளிக்க வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் குறைதீர்வு கூட்டம்
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர். மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.
தீக்குளிக்க முயற்சி
பேரணாம்பட்டு அருகே உள்ள மேல்பட்டியை சேர்ந்த ரேவதி (வயது 35) என்ற பெண் தனது 2 குழந்தைகளுடன் கூட்டம் நடைபெறும் காயிதே மில்லத் அரங்கு முன்பு கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் கேனுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பெட்ரோலை தனது தலையில் ஊற்ற முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து பாட்டிலை பறித்து சமாதானம் செய்தனர்.
அப்போது ரேவதி கூறுகையில், மேல்பட்டியைச் சேர்ந்த தரணி என்பவரை கடந்த 2013-ம் ஆண்டு கலப்பு திருமணம் செய்து கொண்டேன். தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த தரணி கடந்த ஆண்டு இறந்துவிட்டார். அவரது பி.எப். பணத்தை போலி வாரிசு சான்றிதழ் காட்டி கணவரின் உறவினர்கள் பறித்துக் கொண்டனர். இதுகுறித்து கேட்டபோது மிரட்டல் விடுக்கின்றனர்.
இதனால் நான் எனது குழந்தைகளுடன் தவித்து வருகிறேன். குடியிக்க வீடுகூட இல்லை. எனது கணவரின் பி.எப். பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இங்கேயே தற்கொலை செய்து கொள்வேன் என்றார். பின்னர் அவர் கலெக்டரை சந்தித்து மனு அளித்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
விழிப்புணர்வு வாகனம்
தமிழ்நாடு மாநில பளுதூக்கும் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான மிக இளையோருக்கான பளுதூக்குதல் போட்டில் வெற்றி பெற்ற வேலூர் மாவட்ட வீரர், வீராங்கனைகள் 34 பேர் கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
முன்னதாக மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் கொடிஅசைத்து தொடங்கி வைத்தார்.
கழுத்தில் தூக்குக்கயிறுடன் வந்த நபர்
கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்ற அரங்கத்துக்கு சிவசக்திசேனா அமைப்பின் நிறுவன தலைவர் ராஜகோபால்ஜி கழுத்தில் தூக்குகயிறு மாட்டியபடி அவருடைய ஆதரவாளர்களுடன் மனு அளிக்க வந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவரை போலீசார் தடுத்து விசாரணை செய்தனர். இதையடுத்து அவர் கலெக்டரிடம் மனு அளித்தார்.
அந்த மனுவில், நான் வேலூரில் நாட்டு மருந்து கடை நடத்தி வருகிறேன். என்னுடைய கடையை 3 முறை ஒரு கும்பல் அடித்து நொறுக்கினர். என்னை கொலை செய்யவும் முயற்சி செய்தனர். இதுபற்றி பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் போலீசார் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு என்னை மிரட்டுகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.