பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு
கொள்ளிடம் அருகே பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 500 கோழிகள் கருகி செத்தன. அந்த கோழிப்பண்ணைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 500 கோழிகள் கருகி செத்தன. அந்த கோழிப்பண்ணைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோழிப்பண்ணை
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பச்சைபெருமாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவருடைய மகன் தமிழ்மாறன்(வயது 30). இவர், இருவக்கொல்லை கிராமத்தில் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த கோழிப்பண்ணையில் இரவு நேரங்களில் தமிழ் மாறனின் தந்தை மணி காவல் பணியில் ஈடுபட்டு வந்தார்.
500 கோழிகள் சாவு
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் கோழிப்பண்ணையில் இருந்து மணி அருகில் உள்ள ஒரு கடைக்கு டீக்குடிக்க சென்றுள்ளார். பின்னர் டீ குடித்து விட்டு அவர் திரும்பி சென்றபோது கோழிப்பண்ணையின் மேற்கூரை தீப்பிடித்து எரிந்து அதில் இருந்த 500 கோழிகள் கருகி செத்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த கோழிப்பண்ணை ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதால் தீப்பிடித்து எரிந்தது யாருக்கும் ெதரியவில்லை.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தீவிபத்து ஏற்பட என்ன காரணம்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
மேலும் இதுதொடர்பாக மணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் யாராவது கோழிப்பண்ணைக்கு தீ வைத்தாா்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.