கோவில்பட்டி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பெண் பணியாளரை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்த அரசு மருத்துவர் கைது
கோவில்பட்டி அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பெண் பணியாளரை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்த அரசு மருத்துவர் நேற்று கைது செய்யப் பட்டார்
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பெண் பணியாளரை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்த அரசு மருத்துவர் நேற்று கைது செய்யப் பட்டார்.
பெண் மருத்துவ பணியாளர்
கோவில்பட்டி மாதாங்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சையதுஅலி மனைவி நீலவேணி (வயது 36). இளையரச னேந்தலில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த சில வருடங்களாக மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வருகிறாராம். அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மு.குருசாமி (வயது 51), மருத்துவ மனையில் பணிபுரியும் பெண் ஒருவரிடம் தகாத செயலில் ஈடுபட்டதை நீலவேணி பார்த்து விட்டாராம். இதையடுத்து மருத்துவர் குருசாமி, நீலவேணியை அவமரியாதை செய்து வந்தாராம்.
கொலைமிரட்டல்
நேற்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள ஓய்வு அறையில் செல் போனை வைத்துவிட்டு, கழிப்பறைக்கு சென்ற நீலவேணி, திரும்பி வந்து பார்த்த போது, ஓய்வு அறையில் வைத்திருந்த செல்போனை காண வில்லையாம். அதையடுத்து மருத்துவரிடம் நீலவேணி கேட்டதற்கு அவரை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து நீலவேணி அளித்த புகாரின் பேரில், மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன் ஆலோசனையின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி, சப்- இன்ஸ்பெக்டர் ஹரிகண்ணன் மற்றும் போலீசார், மருத்துவமனை பெண் பணியாளரை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்த டாக்டர் குருசாமியை கைது செய்தனர்.