நீலகிரி மாவட்ட கலெக்டருக்கு கொரோனா

நீலகிரி மாவட்ட கலெக்டருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. தடுப்பூசி செலுத்தி இருந்ததால், அவருக்கு அதிக பாதிப்பு இல்லை.

Update: 2021-10-25 14:21 GMT
ஊட்டி

நீலகிரி மாவட்ட கலெக்டருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. தடுப்பூசி செலுத்தி இருந்ததால், அவருக்கு அதிக பாதிப்பு இல்லை. 

தடுப்பு நடவடிக்கைகள்

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா. இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வந்தார். மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை முடுக்கிவிட்டு, 18 வயதுக்கு மேல் தகுதி வாய்ந்த அனைவருக்கும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்தார்.

கடந்த 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, 5 நாட்கள் ஊட்டியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது கலெக்டர் உள்பட அரசு அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கலெக்டருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. 

கலெக்டருக்கு கொரோனா

இந்த நிலையில் ஊட்டி அருகே உள்ள கேத்தியில் செயல்படும் ஒரு தனியார் பள்ளியில் சிலருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அப்போது அந்த பள்ளியில் படித்து வரும் கலெக்டரின் மகனுக்கும் கொரோனா உறுதியானது. அவர் வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும் பாதுகாப்பு கருதி கடந்த 19-ந் தேதி ஊட்டியில் இருந்து சென்னை திரும்பிய கவர்னர் ஆர்.என்.ரவியை கலெக்டர் வழியனுப்பி வைக்க செல்லவில்லை.

மகன் பாதிக்கப்பட்டதால், கலெக்டருக்கும் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதனால் சுகாதார குழுவினர் பங்களாவுக்கு சென்று கலெக்டரிடம் சளி மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். இதன் முடிவில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதிக பாதிப்பு இல்லை

இதைத்தொடர்ந்து அவர் பங்களாவில் தனிமைப்படுத்தி கொண்டார். எனினும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டதால் பாதிப்பு அதிகமாக இல்லை. இன்னும் சில நாட்கள் தனிமையில் இருந்து, அதன்பிறகு தொற்று பாதிப்பு இல்லை என்ற முடிவு வந்ததும் பணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் பங்களாவில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டரின் உதவியாளருக்கு தொற்று பாதித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, நீலகிரி மாவட்ட பொறுப்பு கலெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

மேலும் செய்திகள்