சிக்பள்ளாப்பூரில் கனமழை; சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

சிக்பள்ளாப்பூரில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் 50 வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

Update: 2021-10-24 21:47 GMT
சிக்பள்ளாப்பூர்:

கனமழை

  கர்நாடக மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பல ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இதேபோல் நேற்று முன்தினம் இரவும் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சிக்பள்ளாப்பூர் டவுன் உள்பட மாவட்டம் முழுவதும் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.

  சாலைகளில் மழை வெள்ளம் ஆறுபோல பெருக்கெடுத்து ஓடியது. சிக்பள்ளாப்பூர் டவுன் எம்.ஜி. ரோட்டில் மழை வெள்ளம் ஆறுபோல பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். வாகனங்களை ஓட்ட முடியாததால் பலர் அவற்றை மழைவெள்ளத்தில் தள்ளிக்கொண்டு சென்றனர்.

தரைப்பாலம் மூழ்கியது

  கனமழையால் சிக்பள்ளாப்பூர் டவுன் டிவைன் சிட்டி லே-அவுட்டில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் மக்கள் இரவு முழுவதும் தூங்காமல் பாத்திரங்கள், வாளிகள் மூலம் தண்ணீரை வீட்டிலிருந்து அள்ளி வெளியே கொட்டினர். சிக்பள்ளாப்பூர் - கவுரிபித்தனூர் சாலையில் முட்டியளவு தண்ணீர் ஓடியதால் வாகன போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதேபோல் சிக்பள்ளாப்பூரில் இருந்து மஞ்சனபலே கிராமத்திற்கும் செல்லும் சாலையில் உள்ள சுரங்கப்பாதையில் 4 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கி இருந்தது. இதனால் அவ்வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

  மேலும் மஞ்சேனஹள்ளி - தொண்டேபாவி கிராமங்களை இணைக்கும் தரைப்பாலமும் மழை வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டு உள்ளது. கனமழையால் அவ்வழியாக ஓடும் பினாகினா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அந்த தரைப்பாலம் மூழ்கி உள்ளது. இதுதவிர முஸ்கூரு ஏரியும் நிரம்பும் தருவாயில் உள்ளதால் அதிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு இருக்கிறது.

மக்கள் அவதி

  இதனால் முஸ்கூரு ஏரி நீர்வழிப்பாதையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதுபோல் பைரசாகரா ஏரியும் நிரம்பும் தருவாயில் இருக்கிறது. முஸ்கூரு ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது அவ்வழியாக நோயாளிகளை ஏற்றிக்கொண்டு ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் வந்தது. அந்த ஆம்புலன்ஸ் மாவட்ட அரசு ஆஸ்பத்திரி நோக்கி சென்று கொண்டிருந்தது.

  சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அந்த ஆம்புலன்ஸ் வாகனம் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து அவ்வழியாக சென்ற இளைஞர்கள் அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை தள்ளி அங்கிருந்து செல்ல உதவி புரிந்தனர். இந்த மழையால் சிக்பள்ளாப்பூர் மாவட்ட மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

மேலும் செய்திகள்