மூடப்படாத குடிநீர் தொட்டி
கோபி மாதேசியப்பன் வீதியில் கிழக்கு புறத்தில் இணைப்புச் சாலை செல்கிறது. இங்கு குடிநீர் குழாய் அமைப்பதற்காக தொட்டி கட்டியுள்ளார்கள். இந்த தொட்டியின் மேல் சிலாப் வைத்து மூடாமல் அப்படியே விட்டுவிட்டார்கள். பெயருக்கு ஒரு கட்டை மட்டும் வைக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் தெரியாமல் யாராவது தொட்டிக்குள் விழுந்துவிடும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திறந்து கிடக்கும் தொட்டியின்மேல் சிலாப் வைத்து மூட நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நாதன், கோபி.
ரோட்டில் குளம்
அந்தியூர் அடுத்த நகலூர் பெருமாபாளையத்தில் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் இருந்து கொம்புதூக்கி அம்மன் கோவில் வரை தார் சாலை மிகவும் மோசமாக குண்டும்-குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி விழுகிறார்கள். ரோட்டில் உள்ள பெரிய குழிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நகலூர் பெருமாபாளையத்தில் உள்ள தார் ரோட்டை சீரமைக்கவேண்டும்.
அழகேசன், அந்தியூர்.
நுழைவு பாலத்தில் தண்ணீர்
பெருந்துறை ஆர்.எஸ். பகுதியில் உள்ள ரெயில்வே நுழைவு பாலத்தில் எப்போதும் கழிவுநீர் தேங்கியிருக்கும். இதில் தொடர்மழை காரணமாக மழைநீரும் குளம்போல் தேங்கி கிடக்கிறது. மழைநீருடன், கழிவு நீரும் சேர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. இந்த வழியாக பயணிப்பவர்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரெயில்வே நுழைவு பாலத்தில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கவுரிசங்கர், அறச்சலூர்.
முட்புதர்களை அகற்ற வேண்டும்
அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணையின் கரைப்பகுதியில் இருபுறங்களிலும் முட்புதர்கள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. அதனால் வரட்டுப்பள்ளம் அணை கரை உடைய வாய்ப்புள்ளது. உடனே கரையில் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமசாமி, சங்கராபாளையம்.
குப்பை கிடங்காக மாறிய சுடுகாடு
பவானி தாலுகா பருவாச்சி கிராமம் சத்தியா நகரில் உள்ள சுடுகாட்டில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அரசின் சார்பில் ஒரு தகன மேடையும், மேற்கூரையும் அமைத்து மயான வசதி செய்து கொடுக்கப்பட்டது. தற்போது தகன மேடையும், மேற்கூரையும் சிதிலமடைந்து காணப்படுகிறது. மேலும் இந்த சுடுகாடு குப்பை கிடங்காக மாறிவிட்டது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனிமேலாவது குப்பையை அகற்றி தகன மேடையும், மயான வசதியும் அதிகாரிகள் செய்து கொடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சத்தியா நகர்.
போக்குவரத்துக்கு இடையூறு
ஈரோடு-காங்கேயம் செல்லும் ரோட்டில் மூலப்பாளையம் கரூர் பைபாஸ் பிரிவில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். மேலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி இருசக்கர வாகன ஓட்டிகள் ஒரு வழிச்சாலையில் செல்வதால் கனரக வாகனங்கள் மற்றும் பஸ் டிரைவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுதமன், அறச்சலூர்.
சாக்கடை வசதி
பவானி அருகே உள்ள தொட்டிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்டது சங்கரகவுண்டன்பாளையம். இங்குள்ள நடுநிலைப்பள்ளி அருகே உள்ள சாக்கடை தூர்வாரப்படவில்லை. இதனால் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி சுகாதார கேடு ஏற்பட்டு்ள்ளது. உடனே அதிகாரிகள் சாக்கடையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், தொட்டிபாளையம்.
குடிநீர் குழாயில் உடைப்பு
ஈரோடு மாநகராட்சி 57-வது வார்டு பகுதியான ரங்கநாதன் 2-வது வீதியில் பாதாள சாக்கடை பணிக்காக குழி தோண்டப்பட்டது. அப்போது ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்ட குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. உடனே எங்கள் பகுதியில் உடைந்துள்ள குடிநீர் குழாயை சரிசெய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்புதம்பி, ஈரோடு.