நாகலூர் கொள்முதல் நிலையத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்

மெலட்டூர் அருகே நாகலூர் கொள்முதல் நிலையத்தில் தேங்கி நிற்கும் மழைநீரால் நெல்மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன.

Update: 2021-10-24 20:08 GMT
மெலட்டூர்:
மெலட்டூர் அருகே நாகலூர் கொள்முதல் நிலையத்தில் தேங்கி நிற்கும் மழைநீரால் நெல்மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன. 
கொள்முதல் நிலையம்
பாபநாசம் தாலுகா திருக்கருகாவூரை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நாகலூர் அரசு கொள்முதல் நிலையத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. தொடர் மழை காரணமாக  விவசாயிகள் நெல்லை உலர்த்த முடியாத நிலை உள்ளதால் அரசு நெல் கொள்முதல் நிலையங்ளில் நெல் கொள்முதல் செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
தேங்கி நிற்கும் மழைநீர்
 திருக்கருகாவூரை சுற்றியுள்ள பகுதிகளில் குறுவை பருவத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது பெய்து வரும் தொடர்மழையால் நாகலூர் அரசு கொள்முதல் நிலையத்தில் மழைநீர் தேங்கி, அங்கு விவசாயிகள் குவித்து வைத்துள்ள நெல்மூட்டைகள் நனைந்து வீணாகி வருகிறது. மேலும் கொள்முதல் நிலையத்தை சுற்றிலும் மழைநீர் தேங்கி உள்ளதால் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. 
கோரிக்கை 
 விவசாயிகள் அறுவடை செய்து கொண்டுவரக்கூடிய நெல்லை கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைத்து உலர்த்த போதிய அளவு இடவசதி இல்லாத நிலையில் விவசாயிகள் நெல்லை உலர்த்தவும் முடியாமல், விரைவில் விற்கவும் முடியாமல் சிரமத்தில் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம், நுகர்பொருள் வானிப கழக அதிகாரிகள் நாகலூர் அரசு கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றி, சேறும் சகதியுமாக உள்ள பகுதிகளை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்