கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சாவு
கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை அடுத்த வெளிச்சங்குடி கிராமம் அருகே உள்ள ஒரு விவசாய நிலத்தின் கிணற்றில் உள்ளே இருந்து ஒருவரின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அதைக்கேட்டு அருகே வீட்டில் இருந்த ஒரு பெண் அங்கு வந்து கிணற்றில் எட்டிப் பார்த்துள்ளார். அப்போது ஒரு வாலிபர் கிணற்றுக்குள் தண்ணீரில் தத்தளிப்படி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த பெண், தெருவில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். அங்கு வந்த வாலிபர்கள் உயிருக்கு போராடிய வாலிபரை கயிறு கட்டி மீட்க முயன்றனர். ஆனால் முடியாத நிலையில் அவர் தண்ணீரில் மூழ்கினார். உடனடியாக அங்கிருந்தவர்கள் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்திற்கும் ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து கிணற்றில் இறங்கி நீரில் மூழ்கிய வாலிபரை பிணமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர். அவர் யார்? என்பது உள்ளிட்ட விவரம் உடனடியாக தெரியாத நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர் ஆண்டிமடம் அருகே உள்ள சூரப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த ஞானவேலின் மகன் வெங்கடேசன்(வயது 17) என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் ேநற்று மதியம் முதலே அவரை பல இடங்களில் குடும்பத்தினர் தேடியது தெரியவந்தது. மேலும் அவர் வெளிச்சங்குடி பகுதிக்கு நடந்து வந்தபோது இருட்டில் கிணறு இருப்பது தெரியாமல் தவறிவிழுந்ததும் தெரியவந்தது. இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.