‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

Update: 2021-10-24 17:58 GMT
திண்டுக்கல்:
குண்டும், குழியுமான சாலை 
உப்புக்கோட்டை அருகே கூழையனூரில் இருந்து கோட்டூர் செல்லும் சாலை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாததால் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இந்த நிலையில் நேற்று அப்பகுதியில் பெய்த மழையால் சாலையில் மழைநீர் தேங்கி குழிகள் இருப்பதே தெரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாஸ்கரன், கூழையனூர்.
தொல்லை கொடுக்கும் தெருநாய்கள்
பழனி காந்திமார்க்கெட் அருகே உள்ள தேவர்சந்து பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவில் அந்த வழியாக செல்பவர்களை தெருநாய்கள் விரட்டிச்சென்று கடிக்கின்றன. இதனால் வீடுகளை விட்டு வெளியேறவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாரூக், பழனி.
புதர்மண்டி கிடக்கும் ஆரம்ப சுகாதார நிலையம்
தேனி அருகே உள்ள வீரபாண்டியில் அம்மன் நகர் 2-வது தெருவில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார வளாகத்தை சுற்றிலும் முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதனால் விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மேலும் இங்கு தேங்கும் கழிவுநீரை வெளியேற்ற வசதி செய்யப்படவில்லை. இதன் காரணமாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அருண், வீரபாண்டி.
சாலையில் வீணாக செல்லும் குடிநீர்
பழனி கருணாநிதிநகரில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வெளியேறி சாலையில் வீணாக செல்கிறது. மேலும் எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குழாயில் ஏற்பட்ட உடைப்புகளை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சபிக்அலி, கருணாநிதிநகர்.
சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்படுமா?
பழனி நகர் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படுவதில்லை. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. சாலையை கடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சாக்கடை கால்வாய்களை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பரமேஸ்வரன், பழனி.

மேலும் செய்திகள்