முதலாம் ஆண்டு மாணவர் கல்விக்கு 67 டாக்டர்கள் நியமனம்
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் கல்விக்கு 67 டாக்டர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக கல்லூரி டீன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் கல்விக்கு 67 டாக்டர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக கல்லூரி டீன் தெரிவித்துள்ளார்.
மருத்துவ கல்லூரி
ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்டு ரூ.455 கோடியில் மருத்துவ கல்லூரி கட்டிட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
ராமநாதபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி 6 மாடி கட்டிடமும், ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மருத்துவ கல்லூரி நிர்வாக அலுவலகம் மற்றும் மாணவ, மாணவியர் விடுதி 6 மாடி கட்டிடமும் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஏறத்தாழ முடிவடையும் நிலையில் உள்ளன.
இதனை தொடர்ந்து அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் 9 இணை பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதோடு, நரம்பியல், இருதயவியல், சிறுநீரகவியல் ஆகிய 3 புதிய துறைகள் உருவாக்கப்பட்டு அதற்கென துறை தலைவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சிறப்பு வகுப்பு
5 ஆண்டுகளுக்கு தலா 150 மாணவர்களின் கல்வி வசதிக்காக 750 நோயாளிகள் படுக்கை வசதிகள் இருக்க வேண்டிய நிலையில் தற்போதே அரசு ஆஸ்பத்திரியில் 800 படுக்கை வசதி உள்ளது. இதுதவிர, கூடுதல் சிறப்பு வகுப்புகளுக்கான படுக்கை வசதி அறைகள் கட்டும் பணி ஏறத்தாழ முடிவடைந்து விட்டது. மாணவர் சேர்க்கைக்கு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய மருத்துவ கவுன்சில் குழுவினர் ஆய்வு செய்தனர்.
இதன்படி தற்போது முதல்கட்டமாக 100 மாணவர்கள் சேர்க்கைக்கு இந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டுஉள்ளது. இதனை 150 ஆக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதால் விரைவில் தற்காலிக அனுமதி வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் ஹவுஸ் சர்ஜன் எனப்படும் மருத்துவ கல்விக்கு பிந்தைய ஓராண்டு பயிற்சி எடுத்துக்கொள்ள மருத்துவக் கல்வி இயக்குனரகம் தற்போது அனுமதி அளித்துள்ளது.
பயிற்சி
இதன்படி ராமநாதபுரம் மாவட்ட மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு 40 பேருக்கு ஹவுஸ் சர்ஜன் பயிற்சி எடுத்து கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுஉள்ளது.ஏற்கனவே மருத்துவகல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டபோது 50 டாக்டர்கள் பணியாற்றி வந்த நிலையில் தற்போது முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஏற்ப மேலும் 67 டாக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதுதவிர வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவர்கள் இங்கு மருத்துவம் பார்க்க ஒரு ஆண்டு பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதற்காக ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் ஆண்டுக்கு 40 பேர் பயிற்சி மேற்கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது. மேலும் மருத்துவ கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் கல்விக்கு தேவையான அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும்.
தற்போது அவசர சிகிச்சை பிரிவில் கூடுதல் வசதிகள் ஏற்புத்தப்பட்டு வருகின்றன் இந்த தகவலை மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளர் டாக்டர். மலர்வண்ணன் தெரிவித்தார்.