4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
மதுரை அருகே 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
போடி:
போடி ஏலக்காய் விவசாயிகள் சங்க கல்லூரி முதல்வர் சிவக்குமார் வழிகாட்டுதலின்படி தொல்பொருள் ஆராய்ச்சி பேராசிரியர் மாணிக்கராஜ், திண்டுக்கல் மாவட்டம் நெல்லூர் கள்ளர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கருப்பையா, தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கண்ணன் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள தும்மிநாயக்கன்பட்டியில் களஆய்வு மேற்கொண்டனர். அங்கு முனியப்பசாமி கோவில் பகுதியில் உள்ள பாறையில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதுகுறித்து பேராசிரியர் மாணிக்கராஜிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
கருப்பு, வெள்ளை, செங்காவி நிற பாறைகளில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அதில் பழங்கால மனிதர்கள் தங்களது உணர்வுகளை கண்டு வியந்து அஞ்சிய காட்சிகளையும், தான் வென்ற வெற்றிகளையும் ஓவியங்களாக வரைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.