மன்னார்குடியில் மூதாட்டியை அரிவாளால் வெட்டி சங்கிலி பறித்தவர் கைது கடன் பிரச்சினையை சமாளிக்க திட்டம் தீட்டிய பெண்ணும் பிடிபட்டார்

மன்னார்குடியில் மூதாட்டியை அரிவாளால் வெட்டி சங்கிலி பறித்தவரை போலீசார் கைது செய்தனர். கடன் பிரச்சினையை சமாளிக்க அவருடன் சேர்ந்து திட்டம் தீட்டிய பெண்ணும் பிடிபட்டார்.

Update: 2021-10-24 16:45 GMT
மன்னார்குடி:-

மன்னார்குடியில் மூதாட்டியை அரிவாளால் வெட்டி சங்கிலி பறித்தவரை போலீசார் கைது செய்தனர். கடன் பிரச்சினையை சமாளிக்க அவருடன் சேர்ந்து திட்டம் தீட்டிய பெண்ணும் பிடிபட்டார்.

சங்கிலி பறிப்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழ முதல் தெருவில் வசித்து வருபவர் சர்வானந்தம் மனைவி மாரியம்மாள் (வயது62). கடந்த 22-ந் தேதி மர்ம நபர் மாரியம்மாளின் தலையில் அரிவாளால் வெட்டி விட்டு அவர் அணிந்திருந்த 3½ பவுன் சங்கிலியை பறித்து சென்றார். இதுகுறித்து மன்னார்குடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் தெரியவந்த விவரங்கள் குறித்து போலீசார் கூறியதாவது:-
மாரியம்மாள் வீட்டு பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் உலகநாதன் மனைவி ராணி (37). அங்கன்வாடியில் சமையல் வேலை செய்து வருகிறார். இவருடைய கணவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் 2 குழந்தைகள் மற்றும் தாயாருடன் வசித்து வருகிறார்.

கடன் பிரச்சினை

ராணி கடன் பிரச்சினையை சமாளிக்க தனியாக வசித்து வந்த மாரியம்மாளிடம் இருந்து சங்கிலியை பறிப்பதற்கு மீனாட்சியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த கார்த்தி (25) என்பவருடன் சேர்ந்து திட்டம் தீட்டினார். அதன்படி கார்த்தி கடந்த 22-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த மாரியம்மாளை அரிவாளால் வெட்டி கழுத்தில் இருந்த 3½ பவுன் சங்கிலியை பறித்து சென்றார். இதற்கு ராணி உடந்தையாக செயல்பட்டுள்ளார்.
இந்த விவரங்களை கார்த்தி மதுபோதையில் தனது நண்பர் ஒருவரிடம் உளறி உள்ளார். இது போலீசாருக்கு தெரியவந்ததை தொடர்ந்து கார்த்தி, ராணி ஆகியோர் பிடிபட்டனர்.

அரிவாள் -சங்கிலி பறிமுதல்

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தி, ராணி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மாரியம்மாளை வெட்ட பயன்படுத்திய அரிவாள் மற்றும் சங்கிலி ஆகியவற்றை போலீசார் கார்த்தியிடமிருந்து கைப்பற்றினர்.
இந்த சம்பவத்தில் விரைந்து செயல்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவரம்பன் (பயிற்சி), இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் உள்ளிட்ட போலீசாரை மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்திரன் பாராட்டினார்.

மேலும் செய்திகள்