வேலூர் அருகே கல்குவாரி குட்டையில் வாலிபர் பிணம்
கல்குவாரி குட்டையில் வாலிபர் பிணம்
வேலூர்
வேலூரை அடுத்த அரியூர் பெரிய ஏரியின் அருகே உள்ள பழைய கல்குவாரி குட்டையில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக மிதந்து கொண்டிருந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மன் மற்றும் போலீசார் அங்கு சென்று பிணத்தை கயிறுகட்டி மேலே கொண்டு வந்தனர். பின்னர் இறந்த வாலிபர் குறித்து அப்பகுதி பொதுமக்களிடம் விசாரித்தனர். அதையடுத்து வாலிபர் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்துபோன வாலிபர் இளஞ்சிவப்பு நிற சட்டையும், வெள்ளைநிற பேண்ட் அணிந்திருந்தார்.
இதுகுறித்து அரியூர் கிராம நிர்வாக அலுவலர் தாட்சாயிணி அரியூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து வாலிபர் யார்?, எந்த பகுதியை சேர்ந்தவர் என்றும், அவர் குட்டையில் குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாரா?, அல்லது குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.