கொடைக்கானல் அருகே கனமழையால் மலைப்பாதையில் மண்சரிவு; மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அடுக்கம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அடுக்கம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விடிய, விடிய மழை
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக தொடர்மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை பல்வேறு இடங்களில் விடிய, விடிய கனமழை கொட்டித்தீர்த்தது.
இதன் எதிரொலியாக கொடைக்கானல் நகரில் இருந்து பெருமாள்மலை-அடுக்கம்-கும்பக்கரை வழியாக பெரியகுளம் நகருக்கு செல்லும் மலைப்பாதையில், 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த மலைப்பாதையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
மேலும் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. சில இடங்களில் பாறைகள் உருண்டு விழுந்தன.
இயல்பு வாழ்க்கை முடக்கம்
அடுக்கம் கிராமத்தில் உள்ள மலைப்பாதையில் மட்டும் 5 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அக்கம்பக்கத்து கிராமங்களுக்கு, வேலைக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
மேலும் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் உள்ள தோட்டங்களில் மண்சரிவு ஏற்பட்டு பயிர்கள் நாசமாகின. மரங்கள் சாய்ந்து விழுந்ததால் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. போக்குவரத்து பாதிப்பு, மின்சாரம் துண்டிப்பு உள்ளிட்ட காரணங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டது இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் சாலை பணியாளர்கள் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று, மண்சரிவை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் நேற்று இரவு வரை மண்சரிவை சரிசெய்யும் பணி நடைபெற்றது.
எனவே பெருமாள்மலை-அடுக்கம்-கும்பக்கரை மலைப்பாதையில் போக்குவரத்து தொடங்க முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர். இதுதவிர அந்த பாதையில் வந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அருவிகளில் வெள்ளப்பெருக்கு
கொடைக்கானலில் மழை அளவை பொறுத்தமட்டில், நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அப்சர்வேட்டரியில் 48.7 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பலத்த மழையால் கொடைக்கானலுக்கு குடிநீர் வழங்கும் பழைய அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
21 அடி உயரம் கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 20.1 அடியாக உயர்ந்தது. இதேபோல் கொடைக்கானல் புதிய அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 36 அடி உயரம் கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் 25.6 அடியாக உள்ளது.
மேலும் நட்சத்திர ஏரி ஏற்கனவே நிரம்பி வழியும் நிலையில், அதிக நீர்வரத்து காரணமாக ஷட்டர் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொடைக்கானல் நகரை ஒட்டியுள்ள தேவதை அருவி, பாம்பார் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
சுற்றுலா பயணிகள்
இதற்கிடையே கொடைக்கானலில் நேற்று காலை வெயில் சுட்டெரித்தது. பின்னர் மதியம் 2 மணி முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது.
கொடைக்கானலில் பொதுவாக வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் சுற்றுலா பயணிகள் வருகை நேற்று வெகுவாக குறைந்தது. இருப்பினும் கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகள், மழையில் நனைந்தபடி சுற்றுலா இடங்களை கண்டுகளித்தனர்.