மீண்டும் ஊருக்குள் புகுந்த விநாயகன் யானை
வனத்துறையினரின் கண்காணிப்பை மீறி மீண்டும் ஊருக்குள் புகுந்த விநாயகன் யானை, சூரிய சக்தி மின்வேலியை உடைத்து அட்டகாசம் செய்தது.
கூடலூர்
வனத்துறையினரின் கண்காணிப்பை மீறி மீண்டும் ஊருக்குள் புகுந்த விநாயகன் யானை, சூரிய சக்தி மின்வேலியை உடைத்து அட்டகாசம் செய்தது.
தொடர் அட்டகாசம்
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சி பகுதியில் விநாயகன் என்ற காட்டுயானை தினமும் ஊருக்குள் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதை தடுக்க முதுமலையில் இருந்து சங்கர், கிருஷ்ணா, வசிம் உள்ளிட்ட 6 கும்கி யானைகளை வனத்துறையினர் கொண்டு வந்து, தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கூடலூர்- முதுமலை எல்லையான தொரப்பள்ளி முதல் போஸ்பாரா வரை கும்கி யானைகளுடன் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். இதனால் விநாயகன் யானை ஊருக்குள் வருவது தடுக்கப்படும் என்று எல்லையோர கிராம மக்கள் எதிர்பார்த்தனர்.
மீண்டும் ஊருக்குள் நுழைந்தது
குறிப்பாக தொரப்பள்ளி, புத்தூர்வயல், வடவயல், அம்பலமூலா பகுதியில் வழக்கமாக தினமும் விநாயகன் யானை நுழையும் இடங்களில் கும்கி யானைகள் நிறுத்தப்பட்டன. இதனால் கடந்த 2 நாட்களாக விநாயகன் யானை வருகை இல்லாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி வனத்துறையினரும் சற்று நிம்மதி அடைந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் போஸ்பாரா அருகே கரிசனக்கொல்லி பகுதிக்குள் மீண்டும் விநாயகன் யானை நுழைந்தது. தொடர்ந்து பொதுமக்கள் குடியிருப்புகளை முற்றுகையிட்டது. மேலும் அங்கு அமைக்கப்பட்ட சூரிய சக்தி மின் வேலிகளை உடைத்து அட்டகாசம் செய்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
முதுமலையில் அடைக்க வேண்டும்
நேற்று அதிகாலை வரை முகாமிட்ட யானை, அங்கு பயிரிடப்பட்டு இருந்த தென்னை, பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்களையும் நாசம் செய்தது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
முதுமலையில் இருந்து கும்கி யானைகளை அழைத்து வந்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்ட நிலையில், அதை மீறி ஊருக்குள் விநாயகன் யானை புகுந்து அட்டகாசம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே விநாயகன் யானையை பிடித்து முதுமலை முகாமில் அடைத்தால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.