பொன்னேரியில் கத்திமுனையில் போலீஸ்காரரை மிரட்டி தாக்கிய 3 பேர் கைது

பொன்னேரியில் கத்திமுனையில் போலீஸ்காரரை மிரட்டி தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2021-10-24 10:11 GMT
பொன்னேரி,

பொன்னேரி அருகே உள்ள பெரும்பேடு ஊராட்சியில் அடங்கிய லிங்கப்பையன்பேட்டை கிராமத்தில் வசிப்பவர் மணிவண்ணன் (வயது 32). இவர் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் தனிப்படை பிரிவில் பணிபுரிந்து வருகிறார்.

இந்தநிலையில் இவர், மோட்டார் சைக்கிளில் பொன்னேரியில் இருந்து ஆரணி ஆற்றின் பாலம் அருகே பழவேற்காடு சாலையில் சென்றார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

பின்னர் அவர் மீது கற்களை மர்ம கும்பல் வீசி தாக்கிய நிலையில், அந்த வழியாக வந்த பொதுமக்கள் அதை பார்த்து அலறியடித்து ஓடியதாக தெரிகிறது.

இதுகுறித்து பொன்னேரி போலீசில் மணிவண்ணன் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த நிலையில், இது தொடர்பாக சின்னகாவனம் பகுதியை சேர்ந்த வசந்த் (24), மணிகண்டன் (23), சிபிராஜ் (23) உள்பட 3 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்