வாலிபர் ஆணவ கொலை; காதலியின் குடும்பத்தினருக்கு வலைவீச்சு

விஜயாப்புரா அருகே வேறு மத பெண்ணை காதலித்த வாலிபர் ஆணவ கொலை செய்யப்பட்டு உள்ளார். இதுதொடர்பாக காதலியின் குடும்பத்தினரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2021-10-23 21:35 GMT
விஜயாப்புரா:விஜயாப்புரா அருகே வேறு மத பெண்ணை காதலித்த வாலிபர் ஆணவ கொலை செய்யப்பட்டு உள்ளார். இதுதொடர்பாக காதலியின் குடும்பத்தினரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

காதலுக்கு எதிர்ப்பு

விஜயாப்புரா மாவட்டம் அலமேலா தாலுகா பெக்கானூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி நிம்பரகி (வயது 32). இவரும் அதே கிராமத்தை சேர்ந்த வேறு மதத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்து உள்ளனர். மேலும் பல்வேறு இடங்களுக்கு சென்று தங்களது காதலை வளர்த்து வந்து உள்ளனர். இந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் இளம்பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்தது.

ஆனால் ரவி வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதால் திருமணம் செய்து கொடுக்க இளம்பெண்ணின் பெற்றோர் மறுத்து விட்டனர். மேலும் ரவியிடம், தங்களது மகள் உடனான காதலை கைவிட வேண்டும் என்று இளம்பெண் பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர். ஆனாலும் ரவி காதலை கைவிட மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த இளம்பெண்ணின் பெற்றோர், குடும்பத்தினர் ரவியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர்.

அடித்து கொலை

அதன்படி நேற்று முன்தினம் ரவியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய இளம்பெண்ணின் பெற்றோர் தனது வீட்டிற்கு வரும்படி அழைத்து உள்ளார். அங்கு ரவி சென்றதும் இளம்பெண்ணின் தந்தை, தாய் உள்பட 8 பேர் சேர்ந்து ரவியை சரமாரியாக அடித்து உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ரவி பரிதாபமாக இறந்தார். 

தனது கண்முன்னே காதலன் கொலை செய்யப்பட்டதை கண்டு ரவியின் காதலி கதறி அழுதார். மேலும் அலமேலா போலீஸ் நிலையத்திற்கு போன் செய்து ரவி கொலை செய்யப்பட்ட தகவலை காதலி கூறி இருந்தார். ஆனாலும் சம்பவ இடத்திற்கு போலீசார் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட ரவியின் உடலை ஒரு காலி நிலத்தில் வீசிவிட்டு இளம்பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் சென்று விட்டனர். இதுபற்றி ரவியின் குடும்பத்தினருக்கு இளம்பெண் தகவல் கொடுத்து உள்ளார்.

வலைவீச்சு

பின்னர் அந்த இடத்தி்ற்கு சென்ற குடும்பத்தினர் ரவியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுபற்றி அறிந்ததும் அலமேலா போலீசார் அங்கு சென்று ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் வேறு மத பெண்ணை காதலித்ததால் ரவி ஆணவ கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இந்த சம்பவம் குறித்து அலமேலா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகிவிட்ட காதலியின் குடும்பத்தினரை வலைவீசி தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்