சினை பசுமாட்டை துப்பாக்கியால் சுட்ட மர்மநபர்கள்

சிக்கமகளூருவில் சாலையில் சுற்றித்திரிந்த சினை பசுமாட்டை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்ட மனிதாபிமானமற்ற சம்பவம் நடந்துள்ளது. அந்த பசுமாட்டை கிராம பஞ்சாயத்து ஊழியர் ஒருவர் மீட்டு பராமரித்து வருகிறார்.

Update: 2021-10-23 21:34 GMT
சிக்கமகளூரு:சிக்கமகளூருவில் சாலையில் சுற்றித்திரிந்த சினை பசுமாட்டை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்ட மனிதாபிமானமற்ற சம்பவம் நடந்துள்ளது. அந்த பசுமாட்டை கிராம பஞ்சாயத்து ஊழியர் ஒருவர் மீட்டு பராமரித்து வருகிறார். 

மனிதாபிமானமற்ற சம்பவம்

கர்நாடகத்தில் சமீபகாலமாக வாயில்லா ஜீவன்களை கொடுமைப்படுத்துவதும் மனிதாபிமானமற்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதேபோல், சினை பசுமாடு ஒன்றை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்ட கொடூர சம்பவம் சிக்கமகளூருவில் நடந்துள்ளது. இதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

பசுமாட்டை துப்பாக்கியால்...

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா மரசனிகே கிராமத்தில் பசுமாடு ஒன்று சுற்றித்திரிந்து வருகிறது. யாருக்கும் சொந்தமில்லாத அந்த பசுமாடு, அந்த கிராமத்தில் சுற்றித்திரிந்து வந்தது. மேலும் அந்தப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்கும் சென்று மேய்ந்து வந்தது. அந்த பசுமாடு சினையாக இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பசுமாடு, கிராமத்தையொட்டி உள்ள தோட்டத்தில் நின்று கொண்டிருந்தது. 

அப்போது அங்கு வந்த மர்மநபர்கள், துப்பாக்கியால் பசுமாட்டை நோக்கி சுட்டுள்ளனர். அப்போது குண்டு, பசுமாட்டின் காலில் துளைத்துள்ளது. இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். காலில் குண்டு துளைத்ததால் வலியால் துடித்த பசுமாடு, சுருண்டு விழுந்து கத்தியது. 

குட்டி ஈன்றது

இதனை பார்த்த அந்தப்பகுதி மக்கள் உடனடியாக கிராம பஞ்சாயத்து உறுப்பினர் விஸ்வநாத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விஸ்வநாத் விரைந்து வந்து, அந்த பசுமாட்டை மீட்டு தனது வீட்டுக்கு கொண்டு வந்தார். பின்னர் இதுகுறித்து கால்நடை மருத்துவருக்கு விஸ்வநாத் தகவல் கொடுத்தார். கால்நடை டாக்டர் விரைந்து வந்து பசுமாட்டுக்கு சிகிச்சை அளித்து துப்பாக்கி குண்டை அகற்றினார்கள். 

இதற்கிைடயே காலில் வலியால் துடித்த பசுமாடு, குட்டி ஈன்றது. பசுமாடும், குட்டியும் நன்றாக இருப்பதாக கால்நடை டாக்டர் தெரிவித்தார். அதிர்ஷ்டவசமாக மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் குண்டு காலில் பாய்ந்ததால் பசுமாடும், குட்டியும் தப்பியது. 

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதையடுத்து கிராம பஞ்சாயத்து உறுப்பினர் விஸ்வநாத், குண்டு காயம் அடைந்த பசுமாட்டையும், குட்டியையும் தனது வீட்டில் உள்ள கொட்டகையில் வைத்து பராமரித்து வருகிறார். இந்த சம்பவம் குறித்து அவர், கடூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த மனிதாபிமானமற்ற சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்