தொட்டிலில் விளையாடிய போது சேலை கழுத்தில் இறுகி சிறுமி பலி

பறக்கையில் தொட்டிலில் விளையாடிய போது சேலை கழுத்தில் இறுகி சிறுமி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-10-23 21:05 GMT
மேலகிருஷ்ணன்புதூர், 
பறக்கையில் தொட்டிலில் விளையாடிய போது சேலை கழுத்தில் இறுகி சிறுமி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஆட்டோ டிரைவர் மகள்
நாகர்கோவில் கோட்டார் வடலிவிளையை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது34), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ஸ்ரீதேவி (30). இவர்களுக்கு சிவதன்ஷிகா (10) என்ற மகளும், சிவபாலன் (5), சுஜி பாலன் (1½) என்ற 2 மகன்களும் உள்ளனர். 
சந்திரசேகர் கடந்த இரண்டு ஆண்டுகளாக மனைவி குழந்தைகளுடன் பறக்கை கீழரத வீதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். சிவதன்ஷிகா அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் சந்திரசேகர் வழக்கம் போல் ஆட்டோ ஓட்ட சென்று விட்டார். மாலை 5 மணியளவில் மனைவி ஸ்ரீதேவி அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலைக்கு சென்றார். அப்போது சிவன்தன்ஷிகாவிடம் இரண்டு தம்பிகளையும் பார்த்துக் கொள்ளுமாறு கூறி விட்டு சென்றார். 
சேலை கழுத்தில் இறுக்கியது
ஸ்ரீதேவி சென்ற பின்பு சிவதன்ஷிகா வீட்டிலுள்ள தொட்டிலில் அமர்ந்து விளையாடினார். அப்போது எதிர்பாராதவிதமாக தொட்டிலில் உள்ள சேலை சிறுமியின் கழுத்தில் சுற்றியது. இதில் சிவதன்ஷிகா மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இந்தநிலையில் மாலை 6 மணியளவில் ஸ்ரீதேவி வீட்டிற்கு வந்தபோது சிவதன்ஷிகா கழுத்தில் தொட்டிலில் உள்ள சேலை இறுகி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியில் கதறித்துடித்தார். இது குறித்து தனது கணவர் சந்திரசேகருக்கு தகவல் தெரிவித்தார். உடனே வீட்டிற்கு விரைந்து வந்த சந்திரசேகர் சிறுமி சிவதன்ஷிகாவை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சிவதன்ஷிகா இறந்து விட்டதாக கூறினர்.
வழக்குப்பதிவு
இதுகுறித்து சந்திரசேகர் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கபிரியேல், கல்யாணசுந்தரம் ஆகியோர் சிவதன்ஷிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
10 வயது சிறுமி தொட்டிலில் விளையாடிய போது இறந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்