109 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்
ராஜபாளையத்தில் 109 மூடை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையத்தை சேர்ந்த சித்தையா என்பவர், விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடி கொள்முதல் நிலையம் மூலம் வாங்கும் நெல் மூடைகளை, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தில் இருந்து பெற்று, அரிசியாக்கி மீண்டும் அரசுக்கே வழங்கும் ஒப்பந்தம் மூலம் அரிசி ஆலையை நடத்தி வந்தார். கடந்த மாதம் 7-ந் தேதி ஆலையில் இருந்து அரசுக்கு சொந்தமான நெல் மூடைகள் தனியாருக்கு கடத்திய புகாரில் ஆலைக்கு வழங்கப்பட்ட நெல் மூடைகள் முழுவதையும் நுகர் பொருள் வாணிப கழகத்தினர் திருப்பி எடுத்து சென்றனர். மேலும் இது குறித்து அதிகாரிகள் எடுத்த மேல் நடவடிக்கையின் காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், வழக்கும் முடியும் வரை ஆலை இயங்க நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
இந்த நிலையில் ஆலையினுள் ரேஷன் அரிசி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட வழங்கல் துறை பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் விருதுநகர் மாவட்ட வழங்கல் பிரிவு தனி வட்டாட்சியர் சுந்தர பாண்டியன் தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆலை குடோனில் 109 மூடைகள் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1.36 லட்சம் மதிப்பிலான 5 ஆயிரத்து 450 கிலோ அரிசி மூடைகளை பறிமுதல் செய்த வழங்கல் துறையினர், நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.