குமுளியில் பஸ் நிலையம் விரைவில் அமைக்கப்படும்; வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி
தமிழக-கேரள எல்லையான குமுளியில் பஸ் நிலையம் விரைவில் அமைக்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
தேனி:
தமிழக-கேரள எல்லையான குமுளியில் பஸ் நிலையம் விரைவில் அமைக்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
கலந்தாய்வு கூட்டம்
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் வனத்துறை சார்பில் விவசாயிகள், பொதுமக்கள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் முரளிதரன் வரவேற்றார்.
வருசநாடு, மேகமலை சுற்றுவட்டார கிராம மக்களை வனத்தில் இருந்து வெளியேற்ற முயற்சிப்பது, மலைமாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதிச்சீட்டு வழங்க மறுத்தல், வன நில ஆக்கிரமிப்புகள், குமுளி பஸ் நிலையம் அமைத்தல், கீழ் மணலாறு முதல் ஒத்தக்குடிசை வரை சாலை அமைத்தல், தும்மக்குண்டுவில் இருந்து வாலிப்பாறைக்கு சாலை மேம்பாட்டு பணி, சண்முகநாதர் கோவில் சாலை அமைத்தல், சுருளி அருவியில் நீராட அனுமதி, சாக்குலூத்து மெட்டுச்சாலை, போடி-அகமலை சாலை, குரங்கணி-டாப்ஸ்டேஷன் சாலை உள்ளிட்ட நீண்ட கோரிக்கைகள் தொடர்பாக விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.
சுருளி அருவிக்கு இலவச அனுமதி
விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த பின்பு அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:-
மலைமாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதிச்சீட்டு வழங்குதல், வருசநாடு, மேகமலை சுற்றுவட்டார கிராம மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். சுருளி அருவியில் கட்டணம் வசூல் செய்வது என்பது அரசுக்கான வருவாயை நோக்கமாக கொண்டது அல்ல. அதை பராமரிக்கவும், அது சார்ந்த வாழ்வாதாரம் கொண்டுள்ள குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டுக்காகவும் தான். இனி வரும் காலங்களில் சுருளி அருவியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச அனுமதி வழங்கப்படும்.
போடியில் இருந்து அகமலைக்கு உலக்குருட்டி வழியாக சாலை அமைக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். சாக்குலூத்து மெட்டுச்சாலை அமைப்பது தொடர்பாக ஏற்கனவே நடத்திய ஆய்வுகளின் போது சாலை அமைக்க சாத்தியக்கூறுகள் இல்லை என்று தெரியவந்துள்ளது. இருப்பினும் வனத்துறை அதிகாரிகளை கொண்டு மீண்டும் ஆய்வு நடத்தப்படும்.
குமுளி பஸ் நிலையம்
தமிழக-கேரள மாநில எல்லையில் தமிழக பகுதியில் உள்ள குமுளியில் போக்குவரத்து கழக பணிமனையை இடமாற்றம் செய்த நிலையில், அங்கு பஸ் நிலையம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. குமுளியில் பஸ் நிலையம் அமைக்க இருந்த தடைகளை விலக்கி அங்கு விரைவில் பஸ் நிலையம் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் 7 கூட்டு வன மேலாண்மை குழுக்களை சேர்ந்த 105 உறுப்பினர்களுக்கு ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் சுழல் நிதி கடன், 5 சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த 60 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சம் சுழல் நிதி கடன், வன உயிரின மோதலால் பாதிக்கப்பட்ட 17 பேருக்கு ரூ.19 லட்சம் நிவாரணம் ஆகியவற்றை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்.
கூட்டத்தில் முதன்மை தலைமை வன பாதுகாவலர் அசோக் உப்ரித்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, தலைமை வன உயிரினக் காப்பாளர் சேகர் குமார் நீரஜ், கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் உறுப்பினர் செயலர் ஸ்ரீவஸ்தவா, ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பக வன பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் தீபக் எஸ்.பில்ஜி, மாவட்ட வன அலுவலர் வித்யா, தி.மு.க. தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் மற்றும் வனத்துறை அதிகாரிகள், அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் மேகமலை புலிகள் காப்பக மண்டல துணை இயக்குனர் ஆனந்த் நன்றி கூறினார்.
முன்னதாக தேனி சுற்றுலா விருந்தினர் மாளிகையில் தேனி மாவட்டத்தில் வனத்துறை சார்ந்து உள்ள பிரச்சினைகள், வன நில ஆக்கிரமிப்புகள் தொடர்பாக வனத்துறை உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.