கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த மழை அருவிகளில் வெள்ளப்பெருக்கு
கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த மழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் பகுதியில், நேற்று பிற்பகல் 2 மணி முதல் விட்டுவிட்டு மழை பெய்தது. பின்னர் மாலை 6.30 மணி முதல் 3 மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. டம்டம் பாறை எதிரே உள்ள தலைவால் நீர்வீழ்ச்சி மற்றும் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அத்துடன் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. அத்துடன் அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டது. மழை காரணமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் ஏரிச்சாலையில் அதிகமான தண்ணீர் தேங்கி நிற்கின்றது. அத்துடன் நட்சத்திர ஏரியில் இருந்து அதிகமான உபரி நீர் வெளியேறி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளில் முடங்கினர். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அடிக்கடி வத்தலக்குண்டு மலைப்பாதையில் மரங்கள் சாய்ந்து விழுகின்றன. எனவே பேரிடர் மீட்புக் குழுவினரை ஊத்து மற்றும் பெருமாள்மலை பகுதியில் நிறுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.