காதலியின் தந்தை செல்போனுக்கு ஆபாச புகைப்படங்கள் அனுப்பி மிரட்டல்
வேலூரில் காதலை கைவிட்டதால் காதலியின் தந்தை செல்போனுக்கு ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பி மிரட்டல் விடுத்த ஆந்திராவை சேர்ந்த மருத்துவமனை ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர்
வேலூரில் காதலை கைவிட்டதால் காதலியின் தந்தை செல்போனுக்கு ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பி மிரட்டல் விடுத்த ஆந்திராவை சேர்ந்த மருத்துவமனை ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
காதலுக்கு எதிர்ப்பு
ஆந்திர மாநிலம் ஸ்ரீககுளம் மாவட்டம் இர்மண்டலம் தாலுகா படலிகிராமத்தை சேர்ந்தவர் பாபுராவ். இவருடைய மகன் யார்லங்கி குர்மி (வயது 28). வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்.
அப்போது அவருக்கும், அதே மருத்துவமனையில் மயக்கவியல் துறையில் பணியாற்றிய சத்துவாச்சாரியை சேர்ந்த 27 இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
அதையடுத்து இருவரும் பல்வேறு இடங்களுக்கு சுற்றித்திரிந்ததாகவும், அப்போது அவர்கள் நெருக்கமாக இருந்ததாகவும், அவற்றை செல்போனில் புகைப்படமாக எடுத்தாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்களின் காதல் விவகாரம் இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்தது.
அதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து மகள் வேலைக்கு செல்வதை உடனடியாக நிறுத்தினார்கள்.
சில நாட்களுக்கு பின்னர் இளம்பெண் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்தார். யார்லங்கி குர்மியிடம் தங்கள் மகளுடன் எவ்வித தொடர்பும் வைக்க கூடாது என்று பெண்ணின் பெற்றோர் கண்டிப்புடன் கூறி உள்ளனர்.
ஆந்திர வாலிபர் கைது
சிறிது நாட்களுக்கு பின்னர் யார்லங்கி குர்மி செல்போனில் காதலியை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் அதற்கு பதிலளிக்கவில்லை என்றும், சேலத்துக்கு சென்று நேரில் சந்தித்துபேச முயன்றபோதும் சந்திக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
தனது காதலி பெற்றோரின் பேச்சை கேட்டு காதலை கைவிட்டதால் யார்லங்கி குர்மி ஆத்திரம் அடைந்தார். பின்னர் அவர், காதலித்தபோது இருவரும் நெருக்கமான இருந்த சமயத்தில் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை காதலியின் தந்தையின் செல்போனுக்கு அனுப்பினார். மேலும் வீட்டிற்கு சென்று இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக இளம்பெண் சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து யார்லங்கி குர்மியை கைது செய்தார்.
மேலும் அவர் பயன்படுத்திய ஸ்மார்ட் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூரில் பெற்றோரின் சொல்கேட்டு காதலை கைவிட்டதால் காதலியின் தந்தைக்கு ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.