விழுப்புரத்தில் சிறைகைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்

விழுப்புரத்தில் சிறைக்கைதிகளுக்கு கொரோ னா தடுப்பூசி போடும் பணியினை கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்.

Update: 2021-10-23 16:57 GMT
விழுப்புரம், 

தமிழக அரசின் அறிவரையின் படி விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியாக, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்யும் வகையில் வாரந்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. 

இதில் ஒருபகுதியாக விழுப்புரம் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள சிறை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த முகாமை மாவட்ட கலெக்டர் மோகன் தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.
 
62 சதவீதம் பேருக்கு முதல் தவணை 

அப்போது அவர் கூறுகையில், தமிழக அரசு உத்தரவின்படி விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 5 மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. தற்போது 6-வதுகட்டமாக இந்த முகாம் நகராட்சி், பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகள் என்று மொத்தம் 1126 முகாம்கள் நடத்தப்படுகிறது. இதன் மூலமாக 1.15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம்.

இதுவரை தடுப்பூசி முகாம்களில் 13 லட்சத்து 61 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இவற்றில் 62 சதவீதம் பேர் முதல் தவணை செலுத்தி உள்ளனர். 18 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 

தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்களுக்கு பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. 

தொற்று பாதிப்பை தடுக்கும்

விழுப்புரம் கிளை சிறைச்சாலையில் 38 சிறைவாசிகளின் பரிசோதனை மேற்கொண்டு 30 சிறைவாசிகளுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தொற்று பாதிப்பை தடுக்கும் வகையில் மாபெரும் முகாமினை செய்து வருகிறது. இந்த முகாமில் நமது மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கானோர் தடுப்பூசி செலுத்தி கொண்டு வருவது மகிழ்ச்சி அளிக்கக் கூடியது. முதல் தவணை செலுத்திக் கொண்டவர்கள் உரிய காலத்தில் 2-வது  தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது,  நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா மற்றும் பலர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்