தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டில் திடீர் உடைப்பு உடனடியாக சீரமைக்க கலெக்டர் உத்தரவு
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தை பார்வையிட்ட கலெக்டர் மோகன் உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்திற்கு நீர் ஆதாரமாக இருப்பது தென்பெண்ணை ஆறு. தற்போது தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக, ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக, விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்படுள்ள எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டும் நிரம்பி, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் அணைக்கட்டின் மையப்பகுதியில் நேற்று முன்தினம் மண் அரிப்பு ஏற்பட்டு, தண்ணீர் கசிவு ஏற்பட்டது. இதனால் அணைக்கட்டு சிமெண்டு தளத்துக்கு அடிப்பகுதியின் வழியாக தண்ணீர் புகுந்து, வெளியேறிய படி இருந்தது. அணைக்கட்டில் தண்ணீர் தேங்காமல் வெளியேறியபடி இருந்தது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் தொடர்ந்து தண்ணீர் வெளியேறினால், அணைக்கட்டின் சிமெண்டு தளங்கள் உடைந்து போகும் அபாய நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஆற்றில் வந்த தண்ணீரை தற்காலிகமாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடதுபுறம் உள்ள மதகுகளின் வழியாக திருப்பி விட்டனர்.
கலெக்டர் ஆய்வு
இதுபற்றி அறிந்த மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் சென்று உடைப்பு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தடுப்பணையின் நிலை, அதன் மூலம் பாசனத்துக்கு தண்ணீர் செல்லும் இடங்கள் ஆகியன குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அதோடு, தற்போது மண்அரிப்பு ஏற்பட்டு உடைந்துள்ள பகுதியை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதோடு, இனிவரும் காலங்களில் மாவட்டத்திலுள்ள அனைத்து தடுப்பணைகளையும் முழுவதுமாக அவ்வப்பொழுது கண்காணித்து, தடுப்பணையின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்று பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் மோகன் உத்தரவிட்டார். ஆய்வின் போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
தண்ணீர் திருப்பி விடப்பட்டது
இதற்கிடையே உடைப்பு குறித்து பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பிரசன்னாவிடம் கேட்டபோது, எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு மிகவும் பழமைவாய்ந்த ஒன்று. தற்போது பெய்த மழையின் காரணமாக, ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
இதில், அணைக்கட்டு அமைந்து இருக்கும் பகுதியில் இருந்த மணல் தண்ணீரில் அடித்து சென்றதன் காரணமாக, அப்பகுதி வலுவிழந்து இதுபோன்ற உடைப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஆற்றில் தற்போது வந்துகொண்டுள்ள தண்ணீரை வீணாக்காத வகையில், அணைக்கட்டின் இடது புறம் உள்ள ஆலங்கால், மரகதபுரம் ஆகிய பகுதிக்கு மதகுகள் வழியாக தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது.
மேலும் உடைந்த பகுதியில் சீரமைப்பு பணியும் உடனடியாக தொடங்கப்பட்டுள்ளது. இப்பணி 3 நாட்களுக்குள் நிறைவு பெற்றுவிடும். எனவே எதிர்வரும் பருவமழையை எண்ணி அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்தார்.