கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் பாறைகள் உருண்டு விழுந்தன
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் பாறைகள் உருண்டு விழுந்தன. கூடலூரில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
கோத்தகிரி
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் பாறைகள் உருண்டு விழுந்தன. கூடலூரில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
தொடர் மழை
நீலகிரி மாவட்டத்தில் இருந்து சமவெளி பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையாக கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலை உள்ளது. இதற்கிடையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை குறைந்து உள்ளது. இருப்பினும் கோத்தகிரி, குன்னூர், கூடலூர் பகுதிகளில் மழை அதிகமாக பதிவாகி வருகிறது. இதனால் ஈரப்பதம் அதிகரித்ததன் காரணமாக ஆங்காங்கே லேசான மண்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.
பாறைகள் விழுந்தன
இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் தட்டப்பள்ளம் அருகே செங்குத்தான பகுதியில் இருந்து பாறைகள் உருண்டு விழுந்தன.
அந்த நேரத்தில் வாகனங்கள் எதுவும் வராததால் அதிர்ஷ்டவசமாக பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் சாலையின் குறுக்கே பாறைகள் விழுந்து கிடந்ததால், அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கோத்தகிரி நெடுஞ்சாலைத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
உடைத்து அகற்றும் பணி
அதன்பேரில் உதவி கோட்ட பொறியாளர் கணேசன் தலைமையில் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பாறைகளை உடைத்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் போலீசார் வந்து, சிறிய ரக வாகனங்கள் மட்டும் ஒரு வழியாக செல்லும் வகையில் போக்குவரத்தை சீர் செய்தனர். கனரக வாகனங்கள் செல்ல முடியாததால் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றன.
பாறைகள் பெரிய அளவில் இருந்ததால், பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு உடைத்து அகற்றும் பணி நடைபெற்றது.
வெள்ளத்தில் சிக்கிய ஆட்டோ
கூடலூரில் காலை முதல் மிதமான வெயிலும், மாலையில் பரவலாக மழையும் கொண்ட காலநிலை நிலவி வருகிறது. கூடலூர், ஸ்ரீமதுரை, முதுமலை, தேவர்சோலை உள்ளிட்ட இடங்களில் நேற்று மதியம் 1 மணி முதல் 2 மணி வரை திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் செருமுள்ளி, அஞ்சுகுன்னு ஆற்று வாய்க்கால்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் புகுந்தது. தேவர்சோலை பேரூராட்சி குற்றிமுற்றியில் விவசாய நிலங்களை வெள்ளம் சூழ்ந்தது. அங்கு நிறுத்தி வைத்திருந்த ஆட்டோ தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதை கண்ட இளைஞர்கள் உடனே ஆட்டோவை கயிறு கட்டி மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இது தவிர முதுமலை ஊராட்சி முதுகுளி பகுதியிலும் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. சில வீடுகள் மீது மரங்கள் முறிந்து விழுந்தது. கல்லஞ்சேரி பகுதியில் விவசாய நிலத்துக்குள் வெள்ளம் புகுந்து, வாழை உள்ளிட்ட பயிர்களை சூழ்ந்தது. மழை நின்ற பிறகு வெள்ளம் வடிய தொடங்கியது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு நன்கு வெயில் அடித்தது.
மழை அளவு
நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- ஊட்டி-1, கெத்தை-30, கிண்ணக்கொரை-18, பாலகொலா-8, குன்னூர்-8, பர்லியார்-20, எடப்பள்ளி-10, கோத்தகிரி-31, கோடநாடு-9, ஓவேலி-16 உள்பட மொத்தம் 216 மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 7.45 ஆகும். அதிகபட்சமாக கோத்தகிரி, கெத்தையில் 3 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.