திருவள்ளூர் அருகே போலி ஆவணம் மூலம் ரூ.35 லட்சம் நிலத்தை அபகரித்த 3 பேர் கைது

திருவள்ளூர் அருகே போலி ஆவணம் மூலம் ரூ.35 லட்சம் நிலத்தை அபகரித்த 3 பேரை நில அபகரிப்பு தடுப்பு போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2021-10-23 00:01 GMT
போலி ஆவணம் மூலம் விற்பனை

சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் செண்பகா நகர் பகுதியை சேர்ந்தவர் லலிதா தேவி. சென்னை வில்லிவாக்கம் விநாயகர் கோவில் தெரு 5-வது தெருவைச் சேர்ந்தவர் பீட்லா சொர்ணலதா. இவர்கள் இருவரும் இணைந்து திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டு ஸ்ரீராமலுபுரம் பகுதியில் 1,240 சதுர அடி பரப்புள்ள வீட்டு மனையை ரூ.25 லட்சம் விலைக்கு வாங்கினார்கள். இதை அவர்கள் முறையாக பத்திரப்பதிவு செய்து இருந்தனர்.

இந்த நிலையில் அவர்களுக்கு சொந்தமான நிலத்தில் சிலர் பூஜை செய்து கொண்டிருப்பதாக வந்த தகவலையடுத்து, அங்கு விரைந்து சென்று கேட்டபோது, இது தங்களுக்கு சொந்தமான இடம் என தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த லலிதா தேவி இது தொடர்பாக சார்பதிவாளர் அலுவலகம் சென்று விசாரித்த போது, அவரது வீட்டுமனையை ஆள்மாறாட்டம் செய்து சிலர் அபகரித்தது தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து திருவள்ளூரில் உள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசில் புகார் செய்தனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் உத்தரவின்பேரில், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ஜூலியஸ் சீசர், இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், ஹயாத்செரீப், குப்புசாமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

3 பேர் கைது

இந்த விசாரணையில், லலிதா தேவி மற்றும் பீட்லா சொர்ணலதாவுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணம் தயாரித்து விற்றதாக திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு பெருமாள்பட்டு கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஏழுமலை (வயது 45), திருவள்ளூரை அடுத்த நடுகுத்தகை காந்திநகர் ராமலிங்கம் தெருவை சேர்ந்த புருஷோத்தமன் (51) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

அதேபோல சென்னை பெரம்பூர் முத்துக்குமாரசாமி தெருவை சேர்ந்த மோகன் என்பவருக்கு திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் பள்ளியரை குப்பத்தில் உள்ள ஐ.சி.எப் பகுதியில் 2,400 சதுர அடி கொண்ட வீட்டுமனை உள்ளது. இவரது ரூ.10 லட்சம் மதிப்புள்ள வீட்டு மனையை சிலர் போலி ஆவணம் தயாரித்து வேறு ஒருவருக்கு விற்பனை செய்ததாக தெரியவந்ததை அறிந்த அவர், திருவள்ளூர் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக சென்னை ஜி.கே.எம்.காலனி ம.பொ.சி. தெருவை சேர்ந்த பாபு (53) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்