டாஸ்மாக் கடையை மூடக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
டாஸ்மாக் கடையை மூடக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
முற்றுகை
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை நேற்று திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் சிவாடா கிராமத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் திடீரென முற்றுகையிட்டு கையில் பதாகைகளை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
சிவாடா கிராமத்தில் 500-க் கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி, வங்கி, அஞ்சல் அலுவலகம், அரசு உயர்நிலைப்பள்ளி என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள், பெண்கள் என பலதரப்பட்ட மக்களும் மிகவும் அவதியுற்று வருகின்றனர்.
எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூடி அதனை வேறு இடத்தில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
கோரிக்கை மனு
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் திரளான பொதுமக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை செயலாளர் தளபதி சுந்தர், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் சித்தார்த்தன், ஒன்றிய செயலாளர் பன்னீர் ஆகியோருடன் சென்று இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.