ஈரோடு மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது- ஒரு ஓட்டில் வெற்றி
ஈரோடு மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பதவியை ஒரு ஓட்டில் தி.மு.க. வேட்பாளர் கைப்பற்றினார்.
ஈரோடு
ஈரோடு மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பதவியை ஒரு ஓட்டில் தி.மு.க. வேட்பாளர் கைப்பற்றினார்.
மறைமுக தேர்தல்
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்கள் மற்றும் காலியாக இருந்த உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்பட்டது. கடந்த 6 மற்றும் 9-ந் தேதிகளில் நடந்த இந்த தேர்தலின் முடிவுகள் 12-ந் தேதி அறிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சி ஆகியவற்றுக்கான தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நேற்று நடத்தப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சிக்குழு அலுவலகத்தில் நடந்தது.
தி.மு.க.-அ.தி.மு.க. போட்டி
ஈரோடு மாவட்ட ஊராட்சிக்குழு 5-வது வார்டு கவுன்சிலராக இருந்த பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த வேலுச்சாமி இறந்ததால், அந்த பதவி இடம் காலியானது. அ.தி.மு.க. கூட்டணியில் அவர் துணைத்தலைவராக இருந்தார். அந்த வார்டில் தற்செயல் தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார்.
இந்தநிலையில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் துணைத்தலைவர் போட்டிக்கு தயாரானார்கள். தி.மு.க. சார்பில் 3 பேர் துணைத்தலைவர் பதவிக்கு விருப்பம் தெரிவித்தனர். ஆனால் கட்சி மேலிடம் ஈரோடு மாவட்ட ஊராட்சிக்குழு 19-வது வார்டு கவுன்சிலர் ஆர்.கஸ்தூரி துணைத்தலைவராக போட்டியிட அனுமதி அளித்தது. இதுபோல் அ.தி.மு.க. சார்பில் ஏ.கே.பழனிச்சாமி போட்டியிட்டார்.
கஸ்தூரி வெற்றி
ஈரோடு மாவட்ட ஊராட்சிக்குழுவின் 19 வார்டு கவுன்சிலர்களும் நேற்று ஓட்டுப்போட வந்திருந்தனர். ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார். அவரது முன்னிலையில் நடந்த மறைமுக வாக்கெடுப்பில், 10 பேர் தி.மு.க. வேட்பாளராக நின்ற ஆர்.கஸ்தூரிக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர்.
அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.பழனிச்சாமிக்கு 9 பேர் வாக்களித்தனர். இதனால் ஒரு ஓட்டில் தி.மு.க. வேட்பாளர் கஸ்தூரி வெற்றி பெற்று மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பதவியை பிடித்தார்.
அ.தி.மு.க.வில் வெற்றி பெற்றவர்களால்...
ஈரோடு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவியை நவமணி கந்தசாமி வகித்து வருகிறார். இவர் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்றார். பின்னர் முன்னாள் சிட்கோ வாரிய தலைவர் சிந்து ரவிச்சந்திரன் தலைமையில் கோபி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பலரும் தி.மு.க.வில் இணைந்தபோது நவமணி கந்தசாமியும் தி.மு.க.வில் சேர்ந்தார்.
இந்தநிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. வகித்து வந்த துணைத்தலைவர் பதவியும் தி.மு.க.வசம் சென்று உள்ளது. முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் அ.தி.மு.க.வை விட்டு விலகி தி.மு.க.வில் சேர்ந்தபோது அவருடன் தி.மு.க.வில் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்களும் தி.மு.க.வுக்கு வாக்களித்ததால் தி.மு.க. இந்த வெற்றியை பெற்று இருக்கிறது. இவ்வாறு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வென்று, தற்போது தி.மு.க.வில் சேர்ந்தவர்களால் இந்த வெற்றி சாத்தியமாகி உள்ளது.
முன்னாள் அமைச்சரின் மகள்
ஈரோடு மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவராக தேர்வு பெற்ற ஆர்.கஸ்தூரி கொடுமுடி ஒன்றியத்தை சேர்ந்தவர். மாவட்ட ஊராட்சி 9-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவரது கணவர் ராமசாமி. மேலும் கஸ்தூரி தி.மு.க. மேல்சபை எம்.பியும், முன்னாள் அமைச்சருமான அந்தியூர் செல்வராஜின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ஜெகதீசன் (வளர்ச்சி), செல்வராஜ் (தேர்தல்), மாவட்ட ஊராட்சி மன்ற அலுவலக செயலாளர் பொன்னம்பலம், கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். இதுபோல் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம், சிட்கோ வாரிய முன்னாள் தலைவர் சிந்துரவிச்சந்திரன் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கஸ்தூரி அமைச்சர் சு.முத்துசாமியிடம் வாழ்த்து பெற்றார்.