எந்த சவால்களையும் சந்திக்க இந்திய ராணுவத்தை ஒருங்கிணைக்க முடிவு; மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் உறுதி

பெங்களூருவில் விமானப்படை 3 நாள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை தொடங்கி வைத்த ராணுவத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், எந்த சவால்களையும் சந்திக்க இந்திய ராணுவத்தை ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

Update: 2021-10-22 21:05 GMT
பெங்களூரு: பெங்களூருவில் விமானப்படை 3 நாள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை தொடங்கி வைத்த ராணுவத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், எந்த சவால்களையும் சந்திக்க இந்திய ராணுவத்தை ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். 

பொன் விழா ஆண்டு

இந்திய விமானப்படை சார்பில் விமானப்படை அதிகாரிகளின் 3 நாட்கள் மாநாடு தொடக்க விழா பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்ற 50-வது ஆண்டு கொண்டாட்டம் நடந்தது. இந்த பொன் விழா ஆண்டு ‘சுவர்னிசம் விஜய் வர்ஷ்’(வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கான அர்ப்பணிப்பு ஆண்டு) என்ற பெயரில் கொண்டாடுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:- 

1971-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போரிட்டது. இந்த போர், எல்லையை காக்கவோ, வளங்களை மீட்கவோ, அதிகாரத்தை அடையவோ நடக்கவில்லை. மனித சமூகத்தின் கண்ணியம் மற்றும் ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்பது தான் அந்த போரின் நோக்கமா இருந்தது. அரசியல்-ராணுவ நடவடிக்கையின் ஒற்றுமையால், ஆசியாவில் புதிதாக ஒரு நாடு (வங்காளதேசம்) பிறந்தது. சுரண்டுதல், அநீதியை தோற்கடித்து நீதி நிலைநாட்டப்பட்டது. அது நமக்கு வெற்றியாக அமைந்தது.

ஆக்ரோஷமான தன்மை

போரின்போது கிழக்கு, மேற்கு என இரண்டு மண்டலங்கள் தான் இருந்தது என்று கூறினர். அவ்வாறு எளிதாக கூறிவிட முடியும். ஆனால் உண்மையில் பல்வேறு மண்டலங்கள் இருந்தன. அதை நாம் பாதுகாக்க வேண்டி இருந்தது. இது அரசியல்-ராணுவத்தின் ஒருங்கிணைப்பு இல்லாமல் சாத்தியமாகி இருக்க முடியாது. அந்த நேரத்தில் கிழக்கில் இருந்து அகதிகள் அதிக எண்ணிக்கையில் இந்தியாவிற்கு வந்தனர்.

அப்போது எல்லையில் பாகிஸ்தானிடம் இருந்து ஆக்ரோஷமான தன்மை வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த நேரத்தில் வடக்கு மண்டலத்தில் பிற நாடுகளின் தலையீடும் நிறுத்தப்பட்டது. அந்த போரில் அமைதி, நீதி, மனிதநேயத்தை ஏற்படுத்தியதின் மூலம் இந்தியாவின் நற்பெயர் தக்க வைக்கப்பட்டது. அந்த நேரத்தில், இரண்டாம் உலகப்போருக்கு பிறகு அதிகளவில் பாகிஸ்தானை சேர்ந்த 93 ஆயிரம் ராணுவ வீரர்கள் சரண் அடைந்தனர்.

சண்டையிடுதலின் முக்கியத்துவம்

பாகிஸ்தான் போர் தொடங்கிய 14 நாட்களில் மூன்றில் ஒரு பங்கு ராணுவ பலத்தை இழந்தது. கடற்படையில் பாதியையும், விமானப்படையில் நான்கில் ஒரு பங்கையும் அந்த நாடு இழந்தது. அப்போது வரலாற்று ரீதியாக நமது பலம் பல வழியில் நிரூபிக்கப்பட்டது. அந்த போர், சிந்தித்து செயல்படுதல், திட்டமிடுதல், பயிற்சி, ஒற்றுமையாக சண்டையிடுதலின் முக்கியத்துவத்தை நமக்கு கற்பித்தது. நாட்டில் தற்போது பிரதமர் மோடியின் தலைமையில், முப்படைகளுக்கு தலைமை நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

ராணுவத்துறையில் ராணுவ விவகாரத்துறை உருவாக்கப்பட்டுள்ளது. அந்த போரில் வெற்றியை ஈட்டித்தந்து உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு நாடு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளது. அவர்களின் கனவை நிறைவேற்றும் பாதையில் நாம் நடைபோடுவோம். ஸ்ரீராம், இலங்கைக்கு என்ன செய்தாரோ, அதே போல் 1971-ம் ஆண்டு வங்காளதேசத்திற்கு இந்தியா செய்தது. எந்த சேதமும் ஏற்படுத்தாமல் நமது ராணுவம், டாக்காவை கைப்பற்றி அதன் அதிகாரத்தை வங்காளதேசத்திடம் ஒப்படைத்துவிட்டு இந்தியா திரும்பியது.

ராஜதந்திர வெற்றி

அப்போது ரஷியா போன்ற உலகின் பெரிய நாடுகளுடன் இந்தியா கைகோர்க்க முயற்சி செய்தது. பல நாடுகள் ஆதரவு வழங்க நேரடியாக மறுத்த நிலையில் ரஷியா முன்வந்து ஆதரவு தெரிவித்தது. இது நமக்கு பெரும் தார்மிக ஊக்கமாக அமைந்தது.

அது மிகப்பெரிய ராஜதந்திர வெற்றி ஆகும். இதனால், நமது அண்டை நாடுகள் நடுநிலை வகித்தன. நமது பாதையில் இருந்த பல்வேறு கடினமான சூழல்கள் அகற்றப்பட்டன. இந்திய ராணுவத்தில் உள்ள அனைத்து பிரிவுகளும் தற்போது வலுவாக உள்ளது. அதை மேலும் வலுப்படுத்த ஒருங்கிணைக்க வேண்டியது அவசியம். அதை உறுதி செய்யும் வகையில் ராணுவத்தில் அனைத்து நிலைகளிலும் புதுமைகளை அமல்படுத்தி எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலைகளையும், சவால்களையும் எதிர்கொள்ளும் அளவிற்கு ராணுவத்தை உருவாக்குவதே மத்திய அரசின் குறிக்கோள். மத்திய அரசு ராணுவத்தை வலுவாக பலப்படுத்தி ஒருங்கிணைக்க முடிவு செய்து அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இது முதன்மை பணி அடிப்படையில் முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தப்படும்.

முக்கிய இடம் வகிக்கும்

நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் மத்திய அரசு பாதுகாப்பு மற்றும் ராணுவத்துறையிலும், அதை சார்ந்த மற்ற துறைகளிலும் வளர்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. ராணுவத்துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தனியாரை அனுமதிப்பது, ஆயுதங்கள் தொழிற்சாலை, ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி, ஆயுதங்கள் உற்பத்தி போன்றவற்றிலும் தனியாரை ஊக்குவிப்பது உள்ளிட்டவைகளை மத்திய அரசு செய்து வருகிறது.

 இதன்மூலம் உலக அளவில் இந்திய ராணுவம் முக்கிய இடம் வகிக்கும். 
இந்த மாநாட்டின் நோக்கமே அரசியல் மற்றும் ராணுவத்துறையை ஒற்றுமையாக ஒருங்கிணைத்து வழிநடத்துவதுதான். அதுதான் இந்த மாநாட்டின் குறிக்கோளும் ஆகும். 
இவ்வாறு அவர் பேசினார். 

விழாவில் ராணுவ முப்படைகளின் முதன்மை தளபதி பிபின் ராவத், விமானப்படை முதன்மை அதிகாரி வி.ஆர்.சவுத்ரி, ராணுவ செயலாளர் அஜய்குமார், கர்நாடக வருவாய் துறை மந்திரி அசோக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள விமான மேம்பாட்டு நிறுவனத்தை பார்வையிட்டு விமானங்களின் செயல் பாடுகளை ஆய்வு செய்தார். இந்த மாநாட்டில் 1971-ம் ஆண்டு நடைபெற்ற போர் காட்சிகள் அடங்கிய புகைப்பட கண்காட்சியையும் அவர் தொடங்கி வைத்தார். 

மேலும் செய்திகள்