போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்
தேனி மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்களை திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி.விஜயகுமாரி வழங்கினார்.
தேனி:
தேனி மாவட்டத்தில் கொலை, ஆன்லைன் மோசடி, கஞ்சா கடத்தல் போன்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு அந்த சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. இதில் திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரி கலந்துகொண்டு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி ஊக்குவித்தார்.
அதில் தேவதானப்பட்டியில் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்த பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்குமார் தலைமையிலான தனிப்படையினர், ஆன்லைன் மோசடி வழக்கில் டெல்லிக்கு சென்று மோசடி செய்தவர்களை கைது செய்த போடி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான தனிப்படையினருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இதேபோல் கம்பத்தில் கஞ்சா கடத்தியவர்களை கைது செய்த கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையிலான தனிப்படையினர் மற்றும் உத்தமபாளையத்தில் ஜாமீனில் வந்து தலைமறைவான நபரை கைது செய்த சப்-இன்ஸ்பெக்டர் திவான்மைதீன் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஷ் டோங்கரே மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.