பெரும்பான்மை இல்லை என்பதால் பொய்யான குற்றச்சாட்டு: தி.மு.க.வினர் சதியால் எருமப்பட்டி தேர்தல் நிறுத்தம் முன்னாள் அமைச்சர் தங்கமணி பரபரப்பு பேட்டி
பெரும்பான்மை இல்லை என்பதால் பொய்யான குற்றச்சாட்டு: தி.மு.க.வினர் சதியால் எருமப்பட்டி தேர்தல் நிறுத்தம் முன்னாள் அமைச்சர் தங்கமணி பரபரப்பு பேட்டி
நாமக்கல்:
பெரும்பான்மை இல்லை என்பதால் பொய்யான குற்றச்சாட்டை கூறி தி.மு.க.வினர் சதி செய்து எருமப்பட்டியில் தேர்தலை நிறுத்தி விட்டதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி நாமக்கல்லில் பரபரப்பு பேட்டி அளித்தார்.
இடைத்தேர்தல் ரத்து
முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. தலைமை செயலாளருமான தங்கமணி எம்.எல்.ஏ. நாமக்கல்லில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எருமப்பட்டி ஒன்றியக்குழு தலைவர் வருதராஜ் கொரோனாவால் இறந்தார். இதனால் ஒன்றியக்குழு தலைவர் தேர்வு செய்யும் மறைமுக தேர்தல் இன்று (அதாவது நேற்று) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு, அரசு சார்பில் சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டது. ஆனால் திடீரென தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஒன்றியக்குழு உறுப்பினர்கள் 15 பேரில் 10 பேர் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக உள்ளனர். அவர்கள் தி.மு.க.வினரின் மிரட்டலுக்கு பயந்து கோவிலுக்கு சென்று விட்டனர். ஆனால் அவர்களை நான் கடத்தி சென்று விட்டதாக பொதுமக்கள் போர்வையில் கொடுக்கப்பட்ட மனுவில் என் மீது வழக்கு போட்டு தேர்தலை ரத்து செய்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து கேட்டேன். அவர், மனுவை பரிசீலனை செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறினார். நான் சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் நாமக்கல்லுக்கு வந்தேன். அப்படி இருக்கும் போது நான் எப்படி ஒன்றியக்குழு உறுப்பினர்களை கடத்தி இருக்க முடியும்.
அ.தி.மு.க. வெற்றி பெறும்
கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பா.ஜ.க. உறுப்பினர் உள்பட 10 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் இங்கே உள்ளனர். தி.மு.க.வுக்கு பெரும்பான்மை இல்லை என்பதற்காக தி.மு.க.வினர் சதி செய்து தேர்தலை நிறுத்தி விட்டனர். எப்போது ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் நடத்தப்பட்டாலும் அதில் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும்.
என் மீது புகார் அளித்தவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன். அப்போது உண்மை தெரியவரும். தி.மு.க.வினரின் மிரட்டல் ஆடியோக்களும் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும். தேர்தலை நடத்த கலெக்டரிடம் மனு அளிக்க உள்ளோம். நடவடிக்கை இல்லை என்றால் தேர்தலை நடத்த கோர்ட்டுக்கு செல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது பரமத்திவேலூர் சேகர் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், பொன் சரஸ்வதி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சந்திரசேகரன், பொதுக்குழு உறுப்பினர் மயில்சுந்தரம் உள்பட பலர் உடன் இருந்தனர்.