திண்டுக்கல் அருகே ரெயில் என்ஜினில் அடிபட்டு தனியார் நிறுவன ஊழியர் பலி
திண்டுக்கல் அருகே, ரெயில் என்ஜினில் அடிபட்டு தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து கரூருக்கு சோதனை ஓட்டமாக ரெயில் என்ஜின் நேற்று இயக்கப்பட்டது. தண்டவாளத்தில் ஏதேனும் குறைபாடு உள்ளதா? என்பதை கண்டறிவதற்காக இந்த என்ஜின் இயக்கப்பட்டது. எரியோடு வழித்தடத்தில் சீலப்பாடி எம்.ஜி.ஆர்.நகர் அருகே என்ஜின் சென்ற போது வாலிபர் ஒருவர் ரெயில் என்ஜினை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த ரெயில் என்ஜினில் அடிபட்டு அவர் தண்டவாள பகுதியிலேயே விழுந்து உயிரிழந்தார்.
இதை கவனித்த என்ஜின் டிரைவர், திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். பின்னர் திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சையதுகுலம் தஸ்தகீர், தனிப்பிரிவு ஏட்டு ராஜேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை பார்வையிட்டனர். பின்னர் அவருடைய சட்டைப்பையை போலீசார் சோதனையிட்ட போது இறந்தவரின் வாகன ஓட்டுனர் உரிமம் கிடைத்தது.
போலீஸ் விசாரணை
அதில் அவருடைய பெயர் சுந்தர் (வயது 29), மதுரை தனக்கன்குளம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவருடைய உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், மதுரையில் உள்ள சமையல் உபகரணங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்ததும், வேலை விஷயமாக திண்டுக்கல் வந்த அவர், ரெயில் என்ஜின் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அடிபட்டு இறந்ததும் தெரியவந்தது. இறந்த சுந்தருக்கு, மேனகாதேவி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டே ஆகிறது. மேனகாதேவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.